அதிமுக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் திமுகவிற்கு வந்தால் அவரை வரவேற்பீர்களா என்கிற கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்திருந்த நிலையில், இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனும் இதே முடிவை எடுக்கலாம் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இந்தநிலையில், முன்னதாக அறிவித்திருந்தபடி இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை 10 நாட்களுக்கு மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு, சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி 154வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி அருகே உள்ள வ உ சி சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சுதந்திரத்திற்காக போராடிய பாடுபட்ட முக்கிய தலைவர் வ உ சிதம்பரனார். அவர் மிகப்பெரிய செல்வந்தர். சுதந்திரப் போராட்டத்தில் தொடர்ந்து அவர் ஈடுபட்ட தொடர்ந்த போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அவரை சொத்துக்கள் முடக்கப்பட்டது. ஆசிரியர்கள் பெற்ற பிள்ளைகளை விட கற்றுக் கொடுக்கும் பிள்ளைகளை தான் நேசிக்கிறார்கள். ஆசிரியர்கள் இல்லை என்றால் நல்ல சமூகம் உருவாக முடியாது.” என்றார்
மேலும், ஒன்றிய அரசு 8 வருடமாக ஜிஎஸ்டி வரியை கூட்டி வைத்துவிட்டு தற்பொழுது வரியை குறைத்ததாக விளம்பரப்படுத்துகிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திமுகவிற்கு வந்தால் வரவேற்பீர்களா என்று கேள்விக்கு , அதனை முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார். அதேபோல் எதிர்க்கட்சியின் கூட்டணிகள் உடைந்து கொண்டிருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “அதை உடைத்துக் கொண்டிருப்பவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.