சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ. 80 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதிலும் அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு பின்னர் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனாலும் கூட தங்கத்தின் விலையேற்றம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஆபரணத்தங்கம் சவரன் ரூ.80ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 80,040 என்கிற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,005 என்கிற வரலாறு காணாத மைல்கல்லை தொட்டு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.50,000க்கு விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி ரூ.60,000 என்கிற அளவில் விற்பனையானது. கடந்த ஆண்டில் மட்டும் சவரனுக்கு ரூ.10 ஆயிரம் வரை ஏற்றம் கண்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் ஜனவரியில் ரூ.60 ஆயிரமாக இருந்த தங்கம், மெல்ல மெல்ல அதிகரித்து ஒரு சவரன் இன்றைய தினம் ரூ.80,000ஐ தாண்டியிருக்கிறதுஹ். அதாவது 8 மாதங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.20,000 வரை ஏற்றம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்து வரும் நிலையில், இந்த அதிரடி விலையேற்றம் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.