கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திருப்பதி செல்லவிருந்த அரசு பேருந்தை திருடிச் சென்ற வாலிபரை ஆந்திராவில் காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய பார்க்கிங்கில் திருப்பதி செல்லும் அரசு பேருந்து நேற்று காலை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் நேற்று மாலை இதனை இயக்குவதற்காக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சென்று பார்த்த போது காணாமல் போய் இருந்தது. யாரோ திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கிளை மேலாளர் ராம்சிங் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நெல்லூர் போலீசார், கோயம்பேடு போலீசாரை தொடர்பு கொண்டு தமிழ்நாடு அரசு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாகவும், திருடிச் சென்றவரையும் பிடித்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கோயம்பேடு போலீசார் திருட்டு வழக்குப்பதிவு செய்தனர். நெல்லூர் சென்று அந்த நபரை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். பேருந்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைதானவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஞானரஞ்சன் சாஹூ (24) என்பது தெரிந்தது. கூலி வேலை செய்து வரும் இவர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என்பது தெரிய வந்ததுள்ளது. கைதான அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.