தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும், மீண்டும் கைது செய்துவருவதற்கு கடும் கண்டனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் சர்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் எந்த முடிவும் எட்டவில்லை. மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை கடிதம் எழுதியும், நேரில் சென்று கோரிக்கை வைத்தும் உறுதியான, நிலையான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நிகழ்ந்திருக்காது. மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
இந்திய– இலங்கை நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக இருக்கிற வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும், இரு அண்டை நாடுகளிடையே நிலவ வேண்டிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் இப்பிரச்சினையை அணுக வேண்டும். தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும். இல்லையென்றால். பாஜக ஆட்சிக்கு எதிராக மீனவர்களைத் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்“ என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.
