கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜயை வைத்து, திமுகவை அழிக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பாஜக களத்தில் இறங்கி வேலைகளை செய்து வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

கரூர் மரணங்கள் குறித்தும் மற்றும் இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- நாம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே சொல்லி வருகிறோம் விஜயை இயக்குவது பாஜகதான். அவர்களுடைய செட்அப்பில் தான், விஜயை களமிறக்கி விட்டிருக்கிறார்கள். திமுக சிறுபான்மை சமுதாயத்தினரின் வாக்குகளை வைத்துதான் மிகப்பெரிய அளவில் லாபி செய்து கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் வாக்குகளை பாஜகவால் உடைக்க முடியாது. ஆனால் விஜயை வைத்து கிறிஸ்தவர்களின் வாக்குகளை உடைக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய நீண்டகால திட்டமாக உள்ளது. அதற்காக இறக்கிவிடப்பட்ட நபர்தான் விஜய்.
இது அரசியலில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். அது தற்போது நிரூபணமாகியுள்ளது. பாஜக எதற்காக விஜயை தனியாக இறக்கிவிட வேண்டும்? தன்னுடைய கூட்டணியிலேயே அவரை சேர்த்துவிடலாமே? என்று கேள்வி எழக்கூடும். ஆனால் விஜய்நேரடியாக பாஜகவில் சேர்த்தால் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள், விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள்.
இந்த நிலையில், பாஜக விஜயை வைத்து போட்ட அரசியல் கணக்குகள் எல்லாம் தவறாகி போய்விட்டது. கரூரில் 41 பேர் மரணமடைந்ததற்கு பிறகு நடுநிலையான வாக்காளர்கள் மற்றும் முதிய வாக்காளர்கள், அறிவுஜீவிகள் நிச்சயமாக விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் விஜய் உண்மை முகம் இந்த விவகாரத்தில் முழுமையாக வெளிப்பட்டு விட்டது. பாஜக விஜயை இயக்குவதற்கு கைக்கூலியாக செயல்படுபவர் ஆதவ் அர்ஜுனா தான். பல்லாயிரம் கோடி வைத்திருக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு, டெல்லியில் தொடர்பு உள்ளது. அவருடைய மகனை மிரட்டி பாஜகவில் சேர்த்துவிட்டார்கள். அவர் தான் தன்னுடைய மருமகனான ஆதவ் அர்ஜுனாவை இறக்கிவிடுகிறார்.
ஆதவ் அர்ஜுனா மூலம் விஜய்க்கு ஃபண்டிங் செய்து, அவரை தூக்குவதற்கு திட்டமிட்டிருந்தனர். இதனை அவர்கள் சுற்றி வளைத்து செய்து கொண்டிருந்த நிலையில், தற்போது நேரடியாக வந்துவிட்டார்கள். இந்நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனா தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளார். அந்த விமானத்தில் என்எஸ்ஜி எனப்படும் பிளாக் கேட்ஸ் இருவரும் சென்றுள்ளது சந்தேகத்தை உறுதிபடுத்தி இருக்கிறது. மேலும், பாஜக வேட்பாளர் ஒருவரும் அந்த விமானத்தில் சென்றுள்ளார். அப்போது பாஜக வேட்பாளரோடு சேர்ந்து, பாஜக தலைவரை சந்திக்க சென்றுள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தை தொடர்ந்து ஹேமாமாலினி தலைமையில் பாஜக ஒரு குழுவை அமைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பினார்கள். மேலும் கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தை வைத்து விஜய் ரசிகர்களை தூண்டிவிட்டு, திமுகவுக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தை தூண்டிவிட்டு, திமுக ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று பார்த்தனர். திமுகவை அழித்த பிறகு விஜயை தன்னுடன் சேர்த்துக்கொண்டு அரசியல் செய்வது தான் டெல்லி பாஜகவின் திட்டமாகும். ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு சென்ற பிறகு அது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
தேச விரோத கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த விவகாரத்தில் தமிழக அரசு கைது செய்யாவிட்டாலும், மத்திய அரசு கைது செய்திருக்க வேண்டும். கடந்த 40 வருடங்களாக திராவிட கட்சிகள் வளர்த்து வைத்திருக்கும் தமிழ்நாட்டின் இமேஜையும், தமிழ்நாட்டின் அமைதி மற்றும் சட்டம் – ஒழுங்கை நாசப் படுத்துவதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அவர்கள் நேரடியாக இறங்கினால் ஒன்றுமில்லாமல் போய்விடும். எனவே இம்முறை பெரிய அளவில் குளறுபடிகளை செய்து திமுகவை அழித்துவிட வேண்டும். நாம் எதிர்க்கட்சியாக வந்துவிட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
பாஜக முதலில் அதிமுகவை அழித்துவிட்டு, அடுத்த தேர்தலில் திமுகவை அழிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜயை வைத்து திமுகவை அழித்துவிடவும், அதற்கு பிறகு விஜயை காலி செய்யவும் முடிவு செய்துவிட்டனர். விஜய் கனவிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக முடியாது. அதிகபட்சமாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராகக் கூட மிகவும் குறைந்த வாய்ப்புகள் தான் உள்ளன. அவருடைய அரசியல் வாழ்க்கை கரூர் சம்பவத்தோடு முடிந்துவிட்டது. 2026 தேர்தலில் விஜய் ரசிகர்கள் அவருக்கு தான் வாக்களிப்பார்கள். ஆனால் அதை வைத்து விஜயால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. பாஜக தற்போது தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது. அவர்களின் திட்டம் திமுக, விஜயை இருவரையும் காலி செய்வது தான். முதலில் விஜயை வைத்து திமுகவை காலி செய்வார்கள். அதன் பிறகு விஜயை காலி செய்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.