கரூரில் நடந்த கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் குறித்து The New Indian Express நாளிதழ் வெளியிட்ட கள ஆய்வில், இந்த பேரழிவுக்கு முக்கிய காரணமாக தவெக (TVK) தலைவர் விஜய் மற்றும் கட்சியினரின் அனுபவமின்மையே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தவெக விஜய் பேரணிகளை நடத்துவதற்காக, கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை சேகரித்து செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்களில் பெரும்பாலோர் அரசியல் பின்புலமோ, பெரிய கூட்டங்களை நிர்வகிக்கும் அனுபவமோ, பாதுகாப்பு நடைமுறைகளில் பயிற்சியோ இல்லாத அலுவலக ஊழியர்கள், சிறு தொழில்முனைவோர் மற்றும் சாதாரண உறுப்பினர்கள்.
இதன் விளைவாக, ஒரு வாக்கி டாக்கி கூட இல்லாமல், ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய இடத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாத சூழல் உருவானது. இந்த திட்டமிடல் இல்லாத குழப்பம் இறுதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிகப்பெரிய துயரச் சம்பவமாக மாறியது.

கரூர் தவெக நிர்வாகிகளின் கூற்றுப்படி, திமுகவின் முப்பெரும் விழா நடந்த மறுநாள், அதாவது செப்டம்பர் 18, 2025 அன்று, கட்சியின் தலைமையகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்து, விஜய்யின் பேரணிக்கு உடனடியாக தயாராக வேண்டும் என உத்தரவிடப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். இது, ஆளும் கட்சியின் செல்வாக்கை எதிர்க்கும் வகையில் தவெகவின் பலத்தை வெளிப்படுத்துவதற்காக அவசரமாக எடுக்கப்பட்ட முயற்சியாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, தவெக கட்சியில் கடும் பீதியும் குழப்பமும் தலைவிரித்தாடுகின்றன. மாவட்டத் தலைவர்கள் தொடர்பு இல்லாமல் மறைந்துள்ளனர், அவர்களது தொலைபேசிகள் அணைக்கப்பட்டுள்ளன, மற்றும் கட்சியின் வாட்ஸ்அப் குழுக்கள் முற்றிலும் அமைதியாகிவிட்டன. கரூர் தவெக நிர்வாகிகள், “எங்களுக்கு தலைமையிடமிருந்து எவ்வித சட்ட ஆலோசனையோ, நிதி உதவியோ, அல்லது வழிகாட்டுதலோ கிடைக்கவில்லை. நாங்கள் முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டோம்,” என கடும் வேதனையுடன் கூறுகின்றனர்.
இந்த சம்பவம், விஜய்யின் மகத்தான நட்சத்திர செல்வாக்குக்கும், தவெகவின் பலவீனமான அமைப்பு ரீதியான திறன்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், கட்சியின் உட்கட்டமைப்பு மற்றும் தலைமையின் முன்னறிவிப்பு இல்லாத முடிவுகள் இத்தகைய பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது என்று The New Indian Express நாளிதழ் தனது கள ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.