பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே, தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமை வழங்கும் RTE (Right to Education) சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், இம்முறை ஆன்லைனில் அல்லாமல், நேரடியாக பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை.
அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கும் நோக்கில், ஒன்றிய அரசு 2009-ஆம் ஆண்டு RTE சட்டத்தை அமல்படுத்தியது. அதன் கீழ், மாநில அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பள்ளி கட்டணத்தை அரசே ஏற்று செலுத்தும்.

“இலவசக் கல்வி — ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை” என்ற நோக்கத்துடன் நடைமுறையில் உள்ள RTE சட்டத்தின் மூலம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள் தரமான தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
முந்தைய ஆண்டுகளில் RTE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க முடிந்தது. ஆனால் இம்முறை, மத்திய அரசு RTE நிதி விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், விண்ணப்பங்கள் பள்ளிகளின் வழியாக மட்டுமே பெறப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மாணவர்களின் விண்ணப்பப் பதிவு இன்று (அக்டோபர் 6) முதல் தொடங்கியுள்ளது.
விண்ணப்பிக்கும் பொழுது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, வருமான, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பெற்றோர் தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.