சென்னையில் மழை வெள்ள மீட்புப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸடாலின் தொலைபேசி வாயிலாக பேசினார். மேலும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து, தொலைபேசி மூலம் பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை நுங்கம்பாக்கம் ஜெயசங்கர் சாலைக்கு நேரில் சென்று மழைநீரை அகற்றும் பணியை நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக முகாம் அமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.


