40 வயதில் தனக்கு இளம் சாதனையாளர் விருது கிடைத்துள்ளதாக தனுஷ் சிரித்துக் கொண்டே பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது பான் இந்தியா நடிகராக வளர்ந்துள்ளார். இங்கு மட்டும் இல்லாமல் ஹாலிவுட் வரை சென்று தனது நடிப்புத் திறமையை உலகம் அறிய செய்துள்ளார் அவர்.

தற்போது தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்‘ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சிஐஐ தக்ஷின் தென்னிந்திய ஊடக விழாவில் தனுஷ் பங்கேற்றார். இந்த விழாவில் தனுசுக்கு யூத் ஐகான் என்ற இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய தனுஷ் “40 வயதில் தான் எனக்கு யூத் ஐகான் விருது கிடைக்கிறது. வெல்லவும் சாதிக்கவும் இன்னும் நிறைய இருக்கிறது. எனக்கு ஒரு லட்சிய கனவு உள்ளது. அந்த கனவின் காரணமாகத் தான் நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இன்னும் கனவு காண்கிறேன். எனக்கு 30 வயதாகும் போது 50 வயதில் உள்ளவர்கள் என்னை பார்த்து இளமையாக இருப்பதாக கூறினார்கள். இப்போது எனக்கு 40 வயதாகிறது, 60 வயது உள்ளவர்கள் இன்னும் நீங்கள் இளையமையாக உள்ளீர்கள் என்று கூறுகிறார்கள்” என்று தனுஷ் சிரித்துக்கொண்டே பேசியுள்ளார்.


