வக்பு சொத்து பதிவு காலவரம்பு விவகாரம் தொடர்பாக வக்பு தீர்ப்பாயத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்ககோரிய பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, தற்போது வக்பு சொத்துக்களை பதிவு செய்ய வழங்கப்பட்ட காலம் போதுமானதாக இல்லை என்று வலியுறுத்தினார். கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி (portal/app) மூலம் சொத்துகளைப் பதிவு செய்ய பல சிக்கலான விவரங்களை பதிவேற்ற வேண்டும், ஆனால் அதற்கான இறுதி தேதி வரும் 6ம் தேதி வரை மட்டுமே உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
“100 ஆண்டுகளுக்கு முன்பு வக்புவுக்கு சொத்துக் கொடுத்தவர்களின் விவரங்களை எவ்வாறு கண்டறிவது? சொத்து எல்லைகளைக் கூட உறுதி செய்ய நேரம் எடுக்கும். பல இடங்களில் செயலி கூட சரியாக இயங்கவில்லை. இவ்வாறான சூழலில் முழுமையான தகவல்களை பதிவேற்றுவது மிகவும் கடினம் என தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பு, சில தனிநபர்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வக்பு தீர்ப்பாயத்தின் வாயிலாகவே கிடைக்க முடியும் என்றும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், சொத்தை பதிவு செய்யும் செயலி முறையாக இயங்கவில்லை என்றால் அதற்கு ஆதாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம். வெறும் குற்றச்சாட்டு மட்டும் ஏற்க முடியாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும், சொத்து பதிவு தொடர்பான கால நீட்டிப்பு போன்ற நிவாரணங்களுக்கு மனுதாரர்கள் நேரடியாக வக்பு தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


