பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய முயற்ச்சியை முன்னெடுத்துள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை ரயில்வே கோட்டம் பயன்பாடின்றி கிடந்த ரயில்வே நிலங்களை பொதுப் பயன்பாட்டிற்காக மாற்றும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக விளையாட்டு வளாகம் இந்த மாதத்திலேயே மக்களுக்கு திறக்கப்பட உள்ளது. நகர்ப்புற நெரிசல் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது ஒரு இனிய செய்தியாக மாறியுள்ளது.

வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி போன்ற பகுதிகளில் தனியார் விளையாட்டு அரங்கங்களின் உயர் கட்டணம் காரணமாக மக்கள் பயன்பாடு குறைந்து வந்த நிலையில், ரயில்வே குறைந்த கட்டணத்தில் தரமான விளையாட்டு சேவையை வழங்கும் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வேளச்சேரி விளையாட்டு வளாகத்தின் முக்கிய அம்சங்கள்
அவுட்டோர் (Outdoor) வசதிகள்:
அவுட்டோர் வசதி: சுமார் 1,800 சதுர மீட்டர் பரப்பளவில் வெளிப்புற விளையாட்டுப் பகுதி அமைக்கப்படுகிறது. இங்கு கால்பந்து, வாலிபால் மற்றும் கிரிக்கெட் பயிற்சி வலைகள் இடம்பெறும்.
இன்டோர் வசதி:
520 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள உள்ளரங்கில் (Indoor) கூடைப்பந்து மற்றும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டான பிக்கிள்பால் ஆகியவற்றுக்கான வசதிகள் இருக்கும்.
நிர்வாகம் மற்றும் கட்டணம்:
இந்தக் கட்டண விளையாட்டு வசதிகள் ஒரு தனியார் ஒப்பந்ததாரரால் நியாயமான கட்டணத்தில் நிர்வகிக்கப்படும். இது தனியார் அரங்கங்களை விடக் குறைவாக இருக்கும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
திட்டம் விரிவடையும் இடங்கள்,
வேளச்சேரி ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு ஒரு முதல் படியே என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி — ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன.
கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, தரமணி — விரைவில் விளையாட்டு வசதிகள் அமைக்க திட்டம்.
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி போன்ற தொழில் மையங்களில் விளையாட்டு வசதிகள் குறைவாக இருப்பதால் அங்குள்ள இளைஞர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் பெரிய ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வேக்கு புதிய வருவாய் வாய்ப்பு
இந்த புதிய பரிமாற்ற-பயன்பாட்டு திட்டத்தின் மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.12 முதல் 14 லட்சம் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத நிலங்கள், தற்போது வருவாய் ஈட்டும் வசதிகளாக மாறுவதால் ரயில்வேக்குப் புதிய நிதி வாய்ப்புகள் உருவாகுகின்றன.
பொதுமக்களின் வரவேற்பு
நங்கநல்லூர் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மன்றத்தின் செயலாளர் வி. ராமாராவ், இந்த முயற்சியை வரவேற்று, “பல ஆண்டுகளாக வேளச்சேரி ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்படாத காலியிடம் இருந்தது. இப்போது அது பொதுமக்கள் பயன்பெறும் சிறந்த விளையாட்டு வசதியாக மாறியுள்ளது என்பது மிகவும் பாராட்டத்தக்கது” என்று தெரிவித்தார்.
நகர்ப்புறங்களில் இடமின்மையும், அதிக கட்டணமும் காரணமாக விளையாட்டு வசதிகள் பொதுமக்களுக்கு அரிதாகிவிட்ட சூழலில், பயன்பாடின்றி கிடந்த ரயில்வே நிலங்களை மக்களின் நலனுக்குப் பயன்படுத்தும் இந்தப் திட்டம் ஒரு முக்கிய மாற்றத்தை வெளிப்படுத்தும். வேளச்சேரியைத் தொடங்கிய இந்த முயற்சி விரைவில் சென்னை புறநகரங்களுக்கும் பரவத் தொடங்க நிலையில், விளையாட்டு மைதான வசதிகள் அரிதாக உள்ள கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு போன்ற தொழில் மையங்களில் உள்ள இளைஞர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை – அன்புமணி ஆவேசம்


