spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு100 நாள் வேலை திட்டம் …புதிய மசோதாவால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை

100 நாள் வேலை திட்டம் …புதிய மசோதாவால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை

-

- Advertisement -

100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய சட்ட மாற்றத்தால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,354 கோடி அளவுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.100 நாள் வேலை திட்டம் …புதிய மசோதாவால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை2021 முதல் 2025 வரை சராசரியாக ஆண்டுக்கு ரூ.10,758 கோடியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கி வருகிறது. தற்போதுவரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 100 சதவீத நிதியை ஒன்றிய அரசே வழங்கி வந்த நிலையில், புதிய சட்டத்தின் மூலம் இனி 60 சதவீத நிதி மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. எஞ்சிய 40 சதவீத நிதியை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பதால், மாநிலங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் நிதியாண்டில் 12 கோடி மனித நாட்களை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 88.57 லட்சம் பேர் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இந்த பயனாளர்கள் தொடர்ந்து பயன்பெற வேண்டுமெனில், ஒன்றிய அரசின் புதிய மசோதாவினால் தமிழ்நாடு அரசு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.4,354 கோடியை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மேலும், மகாத்மா காந்தியின் பெயரில் செயல்பட்டு வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ரத்து செய்து, “விக்சித் பாரத்”, “ஜி ராம் ஜி” என்ற புதிய பெயர்களில் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது திட்டத்தின் அடிப்படை தத்துவத்துக்கும், காந்தியின் நினைவுக்கும் எதிரானது என அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த புதிய மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதும், மக்களுக்குப் பாதகமானதும் என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசு பல சமூக நலத் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்காத காரணத்தால், மாநில அரசுகள் சொந்த நிதி அல்லது கடன் மூலம் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மற்ற சமூக நலத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது போல, இனி 100 நாள் வேலைத்திட்டத்திற்கும் போதிய நிதி வழங்கப்படாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்றிய அரசு நிதி வழங்காவிட்டால் திட்டத்தின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும், புதிய மசோதாவை தாக்கல் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவையில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து, இந்த விவகாரத்தில் உடனடி விவாதம் நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

புதிய மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு எதிராக திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

“மோதி பார்க்கலாம் வா”… ஓங்கி அடித்த ஸ்டாலின்! அலறிய அமித்ஷா, சிதறிய விஜய்!

MUST READ