முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித்தொகை எவ்வளவு என்பது குறித்து வருமான வரித்துறை விளக்கமான பதில்மனுவை வரும் ஜனவரி 12க்குள் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாக்கியாக வைத்துள்ள ரூ.36.56 கோடி வருமான வரியை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறை கடந்த ஜூலை 23 அன்று நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த நோட்டீஸ்க்கு தடை உத்தரவு பெற்றார். அதையடுத்து அந்த நோட்டீஸை திரும்பப் பெற்ற வருமான வரித்துறை ரூ.13.69 கோடியை செலுத்தும்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பியது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கில் ஜெ.தீபக்கும் இணைந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நிலுவைத் தொகையில் தனது பங்குத்தொகையை தவணை முறையில் செலுத்தி வருவதாக ஜெ.தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்தியகுமார், “ஏற்கெனவே ஜெயலலிதா வருமான வரி பாக்கி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி எனக்கூறிய வருமான வரித்துறை, அதன்பிறகு ரூ.36 கோடி கட்ட வேண்டும் எனக்கூறியது. தற்போது ரூ.13.69 கோடி எனக் கூறுகிறது. வருமான வரித்துறையின் இந்த கணக்கீடு முற்றிலும் தவறானது என்பது தான் எங்கள் தரப்பு வாதம்.
நிலுவை வரி தொடர்பாக தெளிவான எந்த விளக்கத்தையும் வருமான வரித்துறை தெரிவிக்கவில்லை” என்றார். அப்போது ஜெ.தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எல்.சுதர்சனம், “எங்களது பங்களிப்புத் தொகையை தவணை முறையில் செலுத்தி வருகிறோம்” என்றார். வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ.பிரதாப், தற்போது வருமான வரி பாக்கியாக ரூ.13.69 கோடி உள்ளது.
இதில் தனது பங்குத் தொகையை தீபக் செலுத்தி வருவதால், தீபா செலுத்த மாட்டேன், எனக்கூற முடியாது” என்றார். அதையடுத்து நீதிபதி, “மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு என்பது குறித்து விளக்கமான பதில் மனுவை வருமான வரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 12-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3


