spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

-

- Advertisement -

கோம்பை எஸ்.அன்வர்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

1949ல் தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, அதற்கு முதல் முதல் வாழ்த்துத் தந்தி அனுப்பியவர் இசை முரசு நாகூர் ஹனீபா. சிறு வயது முதலே பெரியாரின் ‘குடி அரசு’ பத்திரிகையையும் அறிஞர் பா தாவூத் ஷாவின் ‘தாருல் இஸ்லாம்’ இதழையும் படித்து வளர்ந்தவர், நாகூர் ஹனீபா. இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணாவைச் சென்னை அரசு முகம்மதன் கல்லூரி’ யில் இலக்கியச் சொற்பொழிவாற்ற அழைப்பு விடுத்த காரணத்துக்காக, அதன் தமிழ்த்துறைப் பேராசிரியர் கா.அப்துல் கபூர், அரசுப் பணியை இழக்க நேர்ந்தது. சற்றும் மனம் தளராத பேராசிரியர் கபூர், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின், 26-2-52 அன்று அவர் தலைமையில் கல்லூரியின் தமிழ்ப் பேரவைக் கூட்டத்தில் ‘வாழ்வும் வளமும்’ என்ற பொருளில் அண்ணா உரையாற்றக் கேட்டு மகிழ்ந்தார்.

we-r-hiring

இவ்வாறு பாமரர், படித்தவர் என்று வித்தியாசமில்லாமல் பல இஸ்லாமியர்கள் அண்ணாவின் பின்னால் அரசியல் களத்தில் அணிவகுத்தனர்.

தி.மு.க. உருவான காலகட்டத்தில், சுதந்திர இந்தியாவில் கருஞ்சட்டை அணிவதற்குத் தடை, அரசியல் கூட்டம் நடத்துவதற்கும் பல சமயங்களில் 144 தடை உத்தரவு, கூட்டத்திற்கு ஒலிபெருக்கி கட்டத் தடை, நாடகங்களுக்குச் சென்சார் கெடுபிடி, ‘ஆரிய மாயை’ நூல் எழுதியதற்காக அண்ணாவிற்குச் சிறை வாசம் என்று கடுமையான அடக்குமுறைகளை இயக்கம் எதிர்கொள்ள நேர்ந்தது. ஒருவாறு தடையை நீக்கி கூட்டம் நடத்தினால், பாதுகாப்புக்காக “வேல்கம்பு, ஈட்டி, பாணா, சுத்தரி, தடிகள், இவைகள் புடைசூழத்தான் நாங்கள் நிற்கமுடியும்,” என்று அந்த காலகட்டத்தைக் கவி கா.மு.செரீப்பின் 72-வது பிறந்தநாள் விழாவில் கலைஞர் கருணாநிதி நினைவு கூறுமளவிற்கு அச்சுறுத்தல்களும் ஆபத்தும் நிரம்பிய காலகட்டம்.

இவற்றோடு, சுதந்திரத்திற்கு முன்னர் வரை திராவிட இயக்கத்துடன் போராட்டங்களில் இணைந்து பயணித்த முஸ்லிம் லீக், சுதந்திர இந்தியாவில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ ஆக கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் தலைமையில் உருவெடுத்தபோது, ‘பிரிவினைவாதிகள்’ என்ற அவச் சொல்லைத் தவிர்க்க, அது திராவிட இயக்கத்தினரை விட்டு விலகியே நின்றது. லீகின் நிலைப்பாட்டையே அன்று வெளிவந்த பெரும்பாலான இஸ்லாமியப் பத்திரிகைகளும் கடைப்பிடித்தது மட்டுமல்லாமல், ‘தாருல் இஸ்லாம்’, ‘பிறை’ போன்ற இதழ்கள் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தன. தி.மு.க. வையும் அதன் கொள்கைகளையும் ‘முஸ்லிம்’, ‘இசாத்தே இஸ்லாம். மற்றும் ‘முஸ்லிம் முரசு’ ஆகிய மூன்று பத்திரிகைகளே ஓரளவேனும் ஆதரித்து எழுதின.

இத்தடைகள், எதிர் பிரச்சாரங்களையும் மீறி தி.மு.க.வுடன் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டனர் இஸ்லாமியர். தி.மு.க. அரசியல் இயக்கமாகத் துளிர் விட ஆரம்பித்தபோது, ஜனநாயக நெறிப்படி பல போராட்டங்களைக் கையிலெடுத்தது. அதில் ஒன்று, திராவிட சித்தாந்தத்திற்கு எதிராகச் செயல்பட்ட மத்திய அரசின் ஆட்சியாளர்களுக்குக் கருப்புக்கொடி காட்டுவது. அவ்வாறு அக்டோபர் 24, 1950 அன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் இராஜகோபால ஆச்சாரியாருக்கு எதிராகக் கருப்புக்கொடி ஏந்திச் சென்ற பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் மீது சென்னை மாகாண காங்கிரஸ் அரசாங்கம் கடும் அடக்குமுறைகளைக் கையாண்டது.

அன்று போலீஸ் தடியடியில் அடிபட்ட எண்ணற்ற கழகத் தோழர்களில் மண்ணடி ஷரீபு, மண்ணடி எம்.ஏ.ரஸாக், எம்.எஸ்.எம். மொகய்தீன், எம்.எஸ்.காதர், இப்ராஹிம் போன்ற இஸ்லாமியரும் அடக்கம். சிறை சென்ற தோழர்களில் ஒருவர், மூர்மார்க்கெட் எச்.அப்துல் ஹமீத் கான் தொடர்ந்து தமிழகம் தழுவிய கருப்புக்கொடி போராட்டங்களில் பல இஸ்லாமியர்கள் பங்குபெற்றாலும், 1958ல் சென்னையில் பண்டிதர் நேருவுக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தில் மொய்தீன் பிச்சை என்ற, 40 வயதே நிரம்பிய இஸ்லாமியர் உயிரையும் இழக்க நேர்ந்தது.

அறிஞர் அண்ணாவின் தம்பிகள்

இவ்வாறு தி.மு.க.வுக்காக உழைப்பையும் உயிரையும் தியாகம்செய்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர், நெல்லிக்குப்பம் அப்துல் மஜித். சுதந்திர இந்தியாவில் 1951-32ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லையெனினும், ‘திராவிட நாடு’ கோரிக்கையை ஆதரித்த வேட்பாளர்களுக்குத் தனது ஆதரவினைத் தெரிவித்தது! அவர்களுக்காக வேலையும் செய்தது. திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.கழக ஆதரவு பெற்ற ‘உழைப்பாளர் கட்சியின் வி.முனுசாமி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான பத்திரிகைத் தொழில் அதிபர் ராம்நாத் கோயங்காவிற்கு எதிராகப் போட்டியிட்டார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!அப்துல் மஜித் பிரச்சாரம் செய்த ‘திருக்குறள்’ முனுசாமி வெற்றி பெற, ஜனவரி 24, 1952 அன்று இரவு, கோயங்காவுக்காகத் தேர்தல் வேலை செய்த காங்கிரஸ்காரர் ஒருவரால் மஜீத் படுகொலை செய்யப்பட்டார். அப்படுகொலையைக் கண்டித்து, மார்ச் 6, 1952 அன்று ஈரோட்டில் ஈ.வெ.கி.சம்பத்தின் இல்லத்தில் கூடிய தி.மு.க.வின் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்று, மஜீதின் குடும்பத்தாருக்குப் பொதுநிதி திரட்டுவது என்பது. அதன்படி வயதான பெற்றோர்களை விட்டுச்சென்ற மஜீதின் குடும்பத்திற்காக 2472 ரூபாய் கட்சியினரிடம் நிதி திரட்டி, குடும்பத்தினர் பட்டிருந்த 236 ரூபாய் கடனையும் அடைத்துவிட்டு, மீதிப் பணத்தைத் தற்காலிகச் செலவுக்காகவும், நிலம் வாங்குவதற்காகவும் ஒப்படைத்தார் மு.கருணாநிதி. மஜீதின் பெயரால் தமிழகமெங்கும் வாசகசாலைகளும் அமைக்கப்பட்டன.

இந்தி எதிர்ப்பு

1952ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் தமிழகத்தில் வெடித்த போது, 1938ல் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற முஸ்லிம்கள் இதிலும் அண்ணாவின் தலைமையின் கீழ் அணிவகுத்தனர். கடையநல்லூரில் பு.ச.முகமது, மேட்டுப்பாளையத்தில் கே.கே.மொகமத் காசீம், சிதம்பரத்தில் ரஷீத், திருவாரூரில் எம்.ஏ.கரிம் மற்றும் ஈ.காதர் பாட்சா, திண்டிவனத்தில் அப்துல்லா, மன்னார்குடியில் எம்.பி.சக்கரியா, பொட்டல்புதூரில் எம்.அகமது, ஓ.ஏ.முகம்மது, நெய்னா முகம்மது. எம். எஸ்.கனி, எஸ்.காதர் மைதீன் ஆகியோர், கோவையில் சி.எம்.அனீபா. எம்.அனீபா, மதுரையில் பி.சி.யாகூப், மா.நா.மைதீன், சி.எம்.தீன், காரைக்குடியில் மகமதலி, சேரன் மாதேவியில் எஸ்.எம்.காதர். எம்.பி.முகைதீன், எம்.அனீபா, கே.புகாரி, எம்.முகம்மது, கே.பி.பக்கீர்ஷா, திருநெல்வேலியில் எஸ்.எம்.மொன்னா முகம்மது, வி.கே.முகையதீன், சே.கா.யூசுப், எ.எம்.உசேன், ரகமத்துல்லா என நூற்றுக்கணக்கான இஸ்லாமியர் தமிழகம் முழுக்கப் பங்கேற்றனர். அதே போல் கைத்தறி நெசவாளருக்கு ஆதரவாக அண்ணாவுடன் திருச்சியின் தெருக்களில் கைத்தறி ஆடைகளைக் கூவிக் கூவி விற்றவர், இசை முரசு நாகூர் ஹனீபா,

இந்தி திணிப்புக்கு எதிரான களமோ, குலக்கல்வித் திட்ட எதிர்ப்போ, மாற்றமோ என களம் எதுவானாலும் அங்கே இஸ்லாமியர்கள் இருந்தார்கள். அவர்கள் சிறுபான்மையினராக அல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்பாக, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக, அன்றைய கழகத்தின் ‘தோழர்களாக’இருந்தனர்.

இருபதாம் நூற்றாண்டில், தமிழர்களிடையே அரசியல் எழுச்சி உருவான அந்த ஆரம்பக் காலகட்டத்தில், குறிப்பாக தமிழக இஸ்லாமியருடன், 1920-களில் இருந்தே, நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் ‘மீலாது விழா’ நிகழ்ச்சிகளில், பிற சமயத்தைச் சார்ந்த மடாதிபதிகளும், அரசியல் தலைவர்களும் கலந்துகொள்வது வழக்கம். தந்தை பெரியாரைப் பின்பற்றி அறிஞர் அண்ணாவும் 1957-க்குள் கிட்டத்தட்ட 300-க்கும் அதிகமான மீலாது விழா மேடைகளில் உரையாற்றியுள்ளார். மீலாது விழா மேடையல்லாது, இஸ்லாமியர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அண்ணா கலந்துகொண்டதுண்டு.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

1957ல் மீலாது விழாவில் சிறப்புரையாற்றிய அண்ணா, “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தமிழ்நாட்டில் பரவி இருந்தது. ஆனால், பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில், இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே, காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டியணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமியக் கருத்துகள் தழுவப்பட்டன” என்று இஸ்லாத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்குமான ஆழமான உறவைச் சுட்டிக் காட்டினார்.

இஸ்லாத்தின் சிறப்புகளை அண்ணா எடுத்துக்கூறிய அதே நேரத்தில், தந்தை பெரியாரைப் போலவே முஸ்லிம்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளையும், வீண் தற்பெருமைகளையும் விமர்சிக்கச் சற்றும் தயங்கியதில்லை. 1945ல் காயல்பட்டணத்தில், வள்ளல் சீதக்காதியின் பிறந்தநாள், ஆண்டுவிழாவில் சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் முகம்மது ஹுசைன் நயினாருடன் அண்ணா கலந்து கொண்டார். அப்போது அண்ணாவுக்கு முன் பேசியவர், “காட்டு வழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்ட ஒருவரை அவர் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து காப்பாற்றியது” என கட்டுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டு, அதைப் புனித குரானுடன் தொடர்புபடுத்தி, “இஸ்லாத்தின் அற்புதம்” என்று பேசியுள்ளார்.

உடனடியாக, அருகிலிருந்த பேராசிரியர் ஹுசைன் நயினாரிடம் பேசி, இது கட்டுக்கதை என்றறிந்த அண்ணா, அதனை கூட்டத்தினரிடம் பகிர்ந்துகொண்டார். ‘அற்புதங்களைக் காட்டி இஸ்லாமியக் கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுறுதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது’ என்று எடுத்துரைத்தார். ‘சீனாவிற்குச் சென்றேனும் கல்வி கற்க வேண்டும்’, என்று நபிகளாரின் காலத்தில் கல்விக்கு முக்கியம் கொடுத்த இஸ்லாமியர், இன்று கல்வியில் பின்தங்கியுள்ளதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

சமூக நீதியை முன்வைத்த அண்ணாவிடம் இஸ்லாமியர் குறித்து நுட்பமான புரிதல் இருந்தது. சீர்திருத்தங்களை ஆதரித்த அதே வேளையில் இஸ்லாமியச் சமூகங்கள் சிலவற்றில் நிலவிய பிரபுத்துவ ஏற்றத் தாழ்வுகளைக் கடுமையாக விமர்சித்தார். ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணையவிருந்தபோது ‘ஜனத்தொகையில் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்களுக்கு சமஸ்தானத்தில் நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் அதிகார இடங்கள் தரும் முறை நிச்சயமாகக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்திட வேண்டும். தர்பார் முறை ஏழை முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனும் எவருக்கும் நன்மையோ, மதிப்போ தருவது அல்ல. ஏழை மக்கள் ஈடேறத் தர்பார் முறை உதவிசெய்ய முடியாது’ என்று அண்ணா வெளியிட்ட 14-12-47 தேதியிட்ட ‘திராவிட நாடு’ இதழ் தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.

அண்ணாவின் இந்த ஒளிவுமறைவற்ற பேச்சும், இஸ்லாத்தை தமிழர்க்கு நெருக்கமான, அறிவுசார்ந்த மார்க்கமாகக் கட்டமைத்ததும், தமிழக முஸ்லிம்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. பெரியார் இஸ்லாத்தை ‘இன இழிவுக்கு’ மாற்றாக முன்மொழிந்தாலும், பல இஸ்லாமியர்களுக்கு அவருடைய இறை மறுப்புக் கொள்கை சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது. அண்ணா முன்வைத்த ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கோட்பாடு இஸ்லாமியர்களுக்கு மிக இயல்பாகப் பொருந்திப்போனது.

உலகளாவிய மனிதநேயப் பார்வை

தி.மு.க. ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில், ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற பல ஆசிய, ஆப்பிரிக்க சமூகங்கள் போராடிக்கொண்டிருந்தன. 1951ல், ஆங்கிலேயர் வசமிருந்த பெட்ரோலிய எண்ணெய் வளத்தை தேசியமயமாக்கிய ஈரான், சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கிய எகிப்து, பிரெஞ்சு காலனியத்திற்கு எதிரான அல்ஜீரியக் கிளர்ச்சி மற்றும் துனீஷியப் புரட்சி, போன்றவற்றைத் திராவிட முன்னேற்றக் கழகம் மனதார வரவேற்றது. அவை இஸ்லாமிய நாடுகள் என்பதனால் அல்ல. உலகளவில் ஒடுக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களைத் திராவிடர்களாகவும். வளத்தைச் சுரண்டும் ஏகாதிபத்தியத்தை ஆரியமாகவும் பார்க்கும்,விசாலமான பார்வையைத் தி.மு.க. கொண்டிருந்ததனால்.

1961ல் ஈ.வெ.கி.சம்பத் தி.மு.க.வை விட்டு விலகித் ‘தமிழ் தேசியக் கட்சி ஆரம்பித்தபோது, நாகூர் ஹனீபா சினந்து பாடிய பாடல்தான் ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’. தி.மு.க.விற்கு எதிரான பத்திரிகைகள், பிற சக்திகள் கட்சியில் பிளவைப் பயன்படுத்தி குழப்பம் விளைவிக்க முற்பட்டபோது, தி.மு. கழகத்திற்காகக் களத்தில் ஆதரவு திரட்டுவோர் என்று அண்ணா 28-5-61 தேதியிட்டு, ‘திராவிட நாடு’ இதழில் சுமார் 250 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் சாதிக் பாட்சா, ஈ.எம்.அனீபா, மேத்தா, தஞ்சை அன்சாரி என்று கிட்டத்தட்ட 25 பேர் இஸ்லாமியர்கள். அதனையடுத்து நாகர்கோவிலில் நடந்த ‘திராவிட மாணவர் முன்னேற்றக் கழக’ மாநாட்டில் உரையாற்றியவர்களில் தமிழக மக்கள்தொகையில் தங்கள் விகிதாசாரத்தைவிட அதிகமாகவே இஸ்லாமியர்கள் பங்குபெற்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1962 வரை சென்னை மாகாண காங்கிரஸ் ஆட்சியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்குகூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனைப் பேரறிஞர் அண்ணா சுட்டிக்காட்டிய பின்னர்தான் கடையநல்லூர் மஜீதுக்கு 1962ல், மூன்றாவது முறையாக காமராஜர் முதல்வரானபோது, அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதே வருடம் தி.மு.க. உதவியுடன் அப்துல் வஹாப் ஜானியும் சென்னை மாகாண மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் இந்தி எதிர்ப்பு

பல நூற்றாண்டுகளாகவே திரைகடலோடி திரவியம் தேடிய தமிழ் இஸ்லாமியரிடம் தமிழுணர்வு இயற்கையாகவே கூர்மை பெற்றிருந்தது. இதுவே, தமிழகத்தில் 1938 முதல் ஆரம்பித்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் அவர்களை வெகுவாக ஈடுபட வைத்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு இலவசமாகக் கருப்புக்கொடி தைத்துத் தர முன்வந்த தையல்காரர்களாகட்டும் இந்தியை எதிர்த்துச் சிறை செல்வதாகட்டும், சிறை சென்று மீண்டவர்களை முன்னின்று வரவேற்பதாகட்டும், இஸ்லாமியச் சமூகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டது. அதற்கு எடுத்துக்காட்டாக, ஜனவரி 1, 1965 அன்று இந்தியை எதிர்த்து சிறை சென்று விடுதலையான அறப்போர் வீரர்கள் 15 பேருக்கு சிவகாசி புகைவண்டி நிலையத்தில், இரவு இரண்டு மணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பினைக் குறிப்பிடலாம்.

சிறை மீண்ட கழகத் தோழர்களை சிவகாசி நகரக் கழகத்தின் சார்பில் பொருளாளர் எஸ். ஏ.ரசாக் மலர்மாலை அணிவித்து வரவேற்றார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரட்டைக் குதிரை வண்டிகள் இரண்டிலும் மறியல் வீரர்கள் அமர்ந்து வர, நகரச் செயலாளரின் முன்னிலையில் ஊர்வலம், நகரின் முக்கிய தெருக்கள் வழியே சென்றது. “முஸ்லிம் நடுத்தெருவில் நகர்வலம் வரும்போது, தாய்மார்கள் மறியல் வீரர்களை வாழ்த்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்” என்கிறது, ஜனவரி 5, 1965 தேதியிட்ட முரசொலி.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

1967ல் அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் SJ. சாதிக் பாட்சா சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இஸ்லாமியருக்குத்தான் மந்திரி பதவி கொடுத்தாகிவிட்டதே, இனி அவர் பார்த்துக்கொள்வார் என்றிராமல், அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் நேரடியாகக் களத்தில் முதல்வரான அண்ணா இறங்கியதும் உண்டு. செங்கல்பட்டு அருகே பள்ளிப்பேட்டை என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு இடையூறு செய்கின்றனர் என்று காயிதேமில்லத் அவர்களிடமிருந்து தகவல் வர, கொடூரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தன் நேரடிக் கண்காணிப்பில் முஸ்லிம்களின் உரிமையை அண்ணா நிலைநாட்டினார் என்பது வரலாறு.

கலைஞர் ஆட்சியில்

1969ல் பேரறிஞர் அண்ணா மறைந்த பின்னர், அடுத்து முதல்வரான கலைஞர் மு.கருணாநிதி, அண்ணா வழிநடத்திய பாதையில், அவர் கட்டியமைத்த இஸ்லாமியருடனான நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்தினார். கலைஞர் மு.கருணாநிதிதியின் ஆட்சி, இந்தியச் சுதந்திரத்திற்குப் பின்னர் இஸ்லாமியர் பட்ட காயங்களை ஆற்றும் அருமருந்தாக அமைந்தது. 1970ல் சென்னை தியாகராயநகர் காவல் நிலையம் அருகே இஸ்லாமியரின் தொழுகைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் திடீரென்று பிள்ளையார் முளைத்தது, சுயம்பாகப் பிள்ளையார் உருவான அந்த இடம் தங்களுக்கே சொந்தம் என்று ஒரு சாரார் பிரச்சினை செய்ய, மதக்கலவரச் சூழல் உருவாகியது. காவல் துறையின் மூலம் உடனடியாக உண்மையை முதல்வர் கருணாநிதி கண்டறிந்து, இடத்தை இஸ்லாமியருக்கு மீட்டுக் கொடுத்தார். அவரது தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியரை இணைத்தது, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மீலாது விழாவை அரசு விடுமுறையாக அறிவித்தது என்று பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

மிக முக்கியமாக நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்டு, சுதந்திர இந்தியாவில் காங்கிரசால் இழுத்து மூடப்பட்ட யுனானி மருத்துவப் பாடப் படிப்பு மீண்டும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியுடன் இணைத்து தொடங்கப்பட்டது. அதே போல் ‘அரசு முஹம்மதன் கல்லூரி’ காங்கிரஸ் அரசால் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு, நாளடைவில் பெண்கள் கல்லூரியாக மாற்றப்பட்டதை நினைவில் கொண்டு, நடந்த தவற்றைச் சரிசெய்யும் நோக்குடன் அதற்குக் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் பெயரைச் சூட்டியது மட்டுமன்றி, முஸ்லிம்களுக்குப் புதிதாகக் கல்லூரி துவங்க, சென்னை மேடவாக்கத்தில் இடமும் அளித்தவர் கலைஞர் கருணாநிதி. மதுரையிலும் ‘வக்ஃப் போர்ட்’ மூலமாக இன்னொரு கல்லூரி உருவாகவும் உதவினார். சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார மற்றும் சுல்வி மேம்பாட்டிற்காகச் சிறுபான்மை நலவாரியமும் துவங்கப்பட்டது.

1976ல் அவசரநிலைப் பிரகடனத்தை எதிர்த்தமையால் கலைஞர் ஆட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356 பிரிவு கொண்டு கலைக்கப்பட்டது. தி.மு.க.வினர் பலரும் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர். கைதானவர்களில் இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் அன்று சிறைத்தண்டனை அனுபவித்தவர்களில் வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அ. ஜின்னா உட்படப் பல இஸ்லாமியர்களும் அடக்கம்.

உறவில் உரசல்கள்

உறவென்றால் உரசல்கள் இல்லாமலா? 1952ல் திருக்குறளைத் திராவிடரின் பொதுமறை என்று நாவலர் நெடுஞ்செழியன் பேச, அது சில இஸ்லாமிய அமைப்புகளில், பத்திரிகைகளில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அண்ணா தலையிட்டு, ‘அது இயக்கத்தின் கருத்தல்ல’ என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பர்தா குறித்த பெரியார் மற்றும் அண்ணாவின் நிலைப்பாடு விமர்சனத்துக்குள்ளாகியபோது, அண்ணா அமைதி காத்தார்.

1981ல் மீனாட்சிபுரம் மதமாற்றத்தை அடுத்து, இந்துத்துவ சக்திகளின் கவனம் தமிழகத்தை நோக்கித் திரும்பியது. “இந்துத்துவம் தமிழகத்தின் மீது கவனத்தைத் திருப்பிய சமயம், 1983ல் ஈழப் படுகொலைகள் அரங்கேற திராவிட இயக்கத்தவரின் முழுக் கவனமும் அடுத்த பல வருடங்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையிலேயே குவிந்து இருந்தது. அது, இந்துத்துவம் கோவையில் காலூன்ற வழிவகுத்தது” என்கிறார் கோவைவாசியும் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான இரா. முருகவேள்.

அதற்கு வசதியாக, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்போது, குறிப்பாக செல்வி ஜெயலலிதா முதல்முறை முதல்வராக இருந்தபோது, அவருடைய செயல்பாடுகள் பல வலதுசாரி இந்துத்துவக் கோட்பாடுகளை ஆதரிப்பதாகவே அமைந்தது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கு, 1991ல் ஆதரவளித்த தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் நிலைப்பாட்டைத் ‘திராவிட அரசியலின் பரிணாம வளர்ச்சி’ என்று அவரது அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் நியாயம் கற்பிக்குமளவுக்கு, இந்துத்துவக் கொள்கைகளை ஜெயலலிதா ஆதரித்தார். பாரம்பரியமாக நூறாண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இஸ்லாமியர் நடத்திவந்த மீலாது விழா ஊர்வலத்தினை ஜெயலலிதாவின் ஆட்சியில் கைவிடவேண்டிய சூழல் உருவாகியது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் பதற்ற நிலையும் உருவானது.

1996 சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்களின் தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்தது. இருப்பினும் மக்களவைத் தேர்தலின்போது, மத்தியில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணி ஏற்படாதவாறு டெல்லியில் காங்கிரஸ் உயர்சாதித் தலைவர்கள் காய் நகர்த்த, இரு முறை 356 சட்டப் பிரிவினால் ஆட்சியை இழந்த தி.மு.க.விற்கு, கொள்கை எதிரியான பா.ஜ.க.வுடன் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் கைகோக்கவேண்டிய நிர்ப்பந்தம். இது இஸ்லாமியரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன், உடனடியாகப் பல கண்டனக் கூட்டங்களை நடத்தியவர், கலைஞர். அது போக, அடிப்படை திராவிடச் சித்தாந்தத்திற்கே எதிரான பாரதிய ஜனதாவுடன் கூட்டணியா? என்ற கேள்வி, பலர் மனத்தில் எழாமல் இல்லை. அது குறித்து அண்மையில் ‘விடுதலை’ நாளேட்டின் சிறப்பு நிகழ்ச்சியில் பேசுகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆராசா, அக் கூட்டணியில் தி.மு.க. மூன்று நிபந்தனைகளுடன் பங்குபெற்றது என்பதைச் சுட்டிக் காட்டினார். அவை, அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டக் கூடாது, பொது சிவில் சட்டம் தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கிய இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 நீக்கப்படக் கூடாது ஆகியவை.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

அக்கூட்டணியில் வெளிப்படையாகப் பேசப்படாத அம்சம் ஒன்றும் இருந்தது. 2006ல் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நடத்திய Regionality, Identity and History Writing  என்ற ஆய்வரங்கத்தில் கலந்துகொண்ட, மறைந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனுடன் நான் உரையாடிய போது, “தி.மு.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த காலத்தில் தமிழக முதல்வர் கலைஞர், டெல்லியில் வாஜ்பேயிடம் அழுத்தம் கொடுத்து, தமிழகத்தில் இந்து முன்னணியின் செயல்பாடுகளை முடக்கிவிட்டார்’ என்று ராம கோபாலன் தன்னிடம் அங்கலாய்த்ததாகப் பேராசிரியர் பாண்டியன் கூறியது, நினைவிற்கு வருகின்றது.

மீண்டும் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தபோது, முஸ்லிம் உலமாக்களுக்காக உலமா வாரியம் அமைத்து, அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்க ஏற்பாடு செய்தவர், கலைஞர். சென்னையில் 2007ல் கலைஞர் பங்குபெற்ற உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில்தான், முஸ்லிம்களின் நெடுநாள் கோரிக்கையான இட ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் தமிழக அரசுப் பணிகளில் 3.5சதவிகித இடம் ஒதுக்கப்பட்டது. இது போக S.J. சாதிக் பாட்சாவை அடுத்து, அ. இரகுமான் கான், S.N.M உபயத்துல்லா, T.P.M மொய்தீன்கான் ஆகியோர் கலைஞர் கருணாநிதியின் அமைச்சரவையை அலங்கரித்த இஸ்லாமியர் ஆவர். முதல்வர் கலைஞரால் பல இஸ்லாமியர்கள் துணை வேந்தர்களாகவும், நீதிபதிகளாகவும், வாரியத் தலைவர்களாகவும் பரிந்துரைக்கப்பட்டனர்.

மு.க.ஸ்டாலின் – திராவிடப் பாரம்பரியம் தொடர்கிறது.

கலைஞரின் மறைவுக்குப் பிறகு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தி.மு.கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட காலகட்டம் சுதந்திர இந்தியா இதுவரை சந்தித்திராத இக்கட்டான சூழல், கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை. மோடியின் தலைமையிலான கொள்கைகளை நாடு முழுவதும் செயல்படுத்துவதிலும், அதிலும் பாஜக அரசு, மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பதிலும், இந்துத்துவக் குறிப்பாக, சிறுபான்மை நலனுக்கெதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தது.

காஷ்மீர் மக்களுக்கான சிறப்புச் சலுகைகைகளை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவை, ஒன்றிய பா.ஜ.க. அரசு ரத்து செய்தபோது, மாநில சுயாட்சியைப் பெரிதும் வலியுறுத்தும் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் அதனை “ஜனநாயகப் படுகொலை” என்று வன்மையாகக் கண்டித்தார். அதனையடுத்து இந்தியச் சிறுபான்மை மக்கள்மீது, ஒன்றிய பா.ஜ.க. அரசு நிகழ்த்திய கொள்கைத் தாக்குதலாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமைந்தது. அதற்கு எதிராக, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இளைஞர் அணியைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி, தலைமைக் கழகமும் போராட்டத்தில் இறங்கியது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்திலும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை வலியுறுத்தியது. 2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் ஆவடி S.M நாசர் ஆகிய இஸ்லாமியர்கள் அமைச்சர்களாகவும் ஆக்கப்பட்டனர். முதல் முறையாக இஸ்லாமிய பெண்ணொருவரை – ராசாத்தி என்றழைக்கப்படும் கவிஞர் சல்மாவை மாநிலங்களவை உறுப்பினராக்கிய பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாரும்.

அதேபோல் 2024ல் வக்ஃப் (திருத்து) மசோதாவை, நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற இயலாத நெருக்கடிக்கு உள்ளான பா.ஜ.க. அரசு, மசோதாவைக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. இந்தக் கூட்டுக்குழுவில் தி.மு.க. சார்பாக மக்களவையில் இருந்து கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவும், மாநிலங்களவையில் இருந்து எம்.எம்.அப்துல்லாவும் இடம்பெற்றனர்.

வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை மார்ச் 27, 2025 அன்று தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றியது.

ஏப்ரல் 3, 2025 அன்று மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் இந்த மசோதாவைக் கண்டித்து, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்குத்தொடுக்கும் என்றும் அறிவித்திருந்தார். சொன்னபடியே ஏப்ரல் 7 அன்று வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக உள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025-ன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

MUST READ