spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதமிழக டிஜிபிக்கு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…

தமிழக டிஜிபிக்கு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…

-

- Advertisement -

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக டிஜிபிக்கு ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என, திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் 2014-ம் ஆண்டு ஆய்வாளராக பணியாற்றிய சந்திரசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

துறை ரீதியான விசாரணைக்கு பின் அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்து, திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்த மேல் முறையீட்டில், இறுதியாக, ஊதிய உயர்வு நிறுத்தம் செய்த தண்டனையை, ஆறு மாதங்களாகக் குறைத்து, டிஜிபி உத்தரவிட்டார்.

we-r-hiring

ஆய்வாளர் முறையாக தகவல்களை தெரிவித்ததாக அரசு வழக்கறிஞர் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்காமல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சந்திரசேகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தும், 2016-ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் சந்திரசேகரன் பெயரை சேர்க்கும்படியும், கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என, சந்திரசேகரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி உயர்வு பட்டியலில் தனது பெயரை சேர்க்கக் கோரி, உயர்நீதிமன்ற உத்தரவு நகலுடன், அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள்  பரிசீலிக்கப்படவில்லை என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை, இதுவரை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்து தடை உத்தரவும் பெறவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். இடைப்பட்ட காலத்தில், உத்தரவை அமல்படுத்தினாலோ, மேல் முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றாலோ, இருவரும் நேரில் ஆஜராக அவசியமில்லை எனவும் நீதிபதி, தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார் – துணை முதல்வர்

MUST READ