ஓவியா

திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.

நால்வருணத்தையும் கடவுளே படைத்தார் என்றும் சனாதனமே மனித இயல்பு, பேதநிலை என்பதொன்றே மனிதகுலத்தை ஆளும் வழி என்றும், அந்த பேதநிலை என்பதும் பிறப்படிப்படையிலேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்றும், மன்னர்களை வசப்படுத்தி இராஜ்ஜிய விதிகளாக்கி வைத்திருந்தனர், பார்ப்பனர்கள்.
அதுமட்டுமல்ல இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்களுக்குப் புரியாத வகையில் /மொழியில் ஒரு குறிப்பிட்ட சாதிக் குழுவுக்குள் பரிமாறப்பட்டு வந்த வாய்வழி மந்திரங்களாக இருந்துவந்தன. இந்த இரண்டாயிரம் ஆண்டுக்கால கெட்டிதட்டிப்போயிருந்த சாதியத்தை வெள்ளையர்களின் வருகை கேள்விக்குள்ளாக்கியது. இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்கின்ற மதத் தத்துவத்துடன் வந்த கிறித்துவ மத அறிஞர்களும் பிரிட்டிசு சட்டதிட்டங்களை மனத்தில் கொண்டு, இந்தக் காலனி நாட்டை ஆளவந்த அதன் ஆட்சியாளர்களும் மெல்ல மெல்ல வேதங்களை அம்பலப்படுத்தி, பின் கேள்விக்குட்படுத்தி, மாற்றங்களுக்கு வித்திட்டார்கள்.
சனாதனம் என்கின்ற ஆக்டோபஸ் வெள்ளையர்களை வசப்படுத்தவும் அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருந்தபோதிலும், அதன் தோல்வி சரித்திரம் தொடங்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர்களுக்கு கிளர்க்குகள் மட்டுமல்ல நல்ல உடல்வலிமையுள்ள வீரர்களும் அருமையாக மாட்டுக்கறி சமைக்கும் சமையல்காரர்களும் தேவைப்பட்டார்கள்.
எனவே, பார்ப்பனர்கள் தங்கள் நாற்காலிகளை சற்று நகர்த்திப்போட காலம் ஆணையிட்டது. வெள்ளை ஆளும் வர்க்கம் முழுமையாகப் பார்ப்பனர் வசப்படவில்லை.
மற்றொருபுறம் ஆங்கிலக் கல்வியும் அய்ரோப்பிய நாடுகளில் மேற்கொண்ட பயணங்களும் பார்ப்பனரல்லாத மக்களில் தலைவர்களை உருவாக்கின. இராமலிங்க அடிகள், நாராயணகுரு, அயோத்திதாச பண்டிதர், டாக்டர் நடேசனார், தியாகராயர், பன்னீர்செல்வம் என்று இந்தப் பட்டியல் நீண்டது. இதில் பேரலையாய்… பெருவீச்சாய் பேருரு எடுத்தவர் பெரியார். இந்த ஆட்சி அமைப்பைக் கைப்பற்றி, அந்தத் தலைவரின் தன்னிகரற்ற தலைமகனாய் அவரின் அரசியல் போராயுதமாக உருவானவர், பேரறிஞர் அண்ணா.
தனது மாணவப் பருவத்திலேயே பெரியாரால் அவர் ஈர்க்கப்பட்டு விடுகிறார். அவர், பெரியாரை நோக்கி முழுமையான பொது வாழ்க்கைக்கு ஆயத்தமாக வந்தபோது, பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். பேரரறிஞர் அண்ணா, தேர்தல் அரசியலில் முதன்மை நம்பிக்கையும் நாட்டமும் கொண்டிருந்த காரணத்தினாலேயே அவர் சுயமரியாதை இயக்கத்தை விடுத்து, நீதிக்கட்சியைத் தேர்ந்தெடுத்து இணைந்திருக்க வேண்டும். ஆம், அண்ணா அவர்கள் நீதிக்கட்சியிலேயே தன்னை முதலில் இணைத்துக்கொள்கிறார். அதன்பின், நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கம் இரண்டுமே இணைக்கப்பட்டு,திராவிடர் கழகம் என்கின்ற ஒரே இயக்கமாக 1944-லிருந்து செயற்படலாயிற்று.
திராவிடர் கழகம் பரிணமித்தபோதே தமிழர் உரிமைகள், தமிழ், தமிழர் விடுதலை என்பதாக எழுச்சிபெற்றிருந்தன. சாதி என்கின்ற நாகத்தைத் தமிழர் ஓர்மை என்கின்ற தடி கொண்டுதான் தாக்க இயலும் என்கின்ற அடிப்படையில்தான் அண்ணாவின் அரசியல் தொடங்குகிறது.
இந்நூற்றாண்டின் தன்னிகரில்லா சிந்தனையாளராகத் தோன்றிய பெரியார், தனது இலக்கைப் பின்வருமாறு மொழிந்தார்
“நமக்கு மேலானதும் கீழானதுமான ஒரு வகுப்பு இருக்கக் கூடாது என்று சொன்னால், அந்த வார்த்தையிலேயே நமக்கு மேலானதாக ஒரு அரசாங்கமும் ஆட்சியும் இருக்கக் கூடாது என்பது உதயமாகிவிடும். அதுபோலவே நமக்கு மேலாகவோ கீழாகவோ ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதும் தோன்றிவிடும்.”
இந்தத் தத்துவ மொழிகளிலிருந்து தமிழர்களுக்கான தனது இலட்சிய இலக்கைப் பின்வருமாறு மொழிகிறார், பேரறிஞர் அண்ணா.
‘தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் எஜமானனாக இல்லாமல், யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என் குறிக்கோள்!
கலை இலக்கியம்
தனது பிரச்சாரத்திற்குக் கலை வடிவத்தை முக்கியமாகத் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்தார். அறிஞர் அண்ணா. பெரும்பாலும் தி.மு.க.வினர் அண்ணா, கலைஞர், நடிகவேள் எம்.ஆர்.இராதா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் ஆகியோர் எடுத்த, எழுதிய, நடித்த படங்கள் யாவும் மக்களின் சமத்துவத்தை, சாதியொழிப்பை, பண்ணையார் எதிர்ப்பை, பகுத்தறிவைப் பேசிய படங்கள்தாம்.
இந்தக் குரல் தங்களுக்கானது என்பதனை உணர்ந்துகொண்ட மிகப் பெரிய சாமானிய மக்களின் கூட்டம், அண்ணாவுக்குப் பின்னால் அணிதிரண்டது. அந்தச் சாமானிய மக்களுக்கானதே தன் வாழ்க்கை என்று அவரும் இறுதி மூச்சு வரை உறுதியாக இருந்தார்.

1949ல் தி.மு.க பிறக்கிறது. தலைவர் பெரியாரை விட்டு விலகினாலும் அவரது தத்துவங்களை விட்டு விலகவில்லை என்றார், அண்ணா. 1967ல் அறிஞர் அண்ணா முதல்வராகிறார். அந்த ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்குகிறார்.
சாதியொழிப்பை இலக்காகக் கொண்ட பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு எதிரானவர்கள் என்று தங்களைப் பறையறிவித்துக்கொண்ட தி.மு.க. ஆட்சியை நாம் நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க முடியும். அறிஞர் அண்ணாவும் அவ்விதமே தனது ஆட்சியை அறிவித்தார். இன்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அதனையே மீண்டும் அறிவித்திருக்கிறார்.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் அறிஞர் அண்ணா அவர்கள் முதலில் கொண்டுவந்த சட்டம், சுயமரியாதைத் திருமணச் சட்டம், இந்த செயற்பாடே அவருக்கு சாதி ஒழிப்பின் மீதும் பெண்ணடிமை ஒழிப்பி மீதும் இருந்த உறுதிப்பாட்டுக்கு அழுத்தமான சான்றாகும்.”
சுயமரியாதைத் திருமணச் சட்டம்.
பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம், சுயமரியாதை இயக்கத்தின் மிக எழுச்சிகரமான தோற்றுவாய் ஆகும். அதன் முக்கிய கூறுகளாவன: 1. பார்ப்பன புரோகித மறுப்பு, 2. பார்ப்பன மந்திர மற்றும் சமஸ்கிருத மறுப்பு, 3. சடங்கு மறுப்பு 4. சாதி மத மறுப்பு, 5. தாலி மறுப்பு, 6. திருமணங்களில் ஆடம்பர மறுப்பு. இதில் எதையெல்லாம் செயற்படுத்திட முடியுமோ அவற்றை அவரவர் தேவை சக்திக்குட்பட்டு நடைமுறைப்படுத்தத் தன் தொண்டர்களை ஊக்குவித்தார் பெரியார்.
தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு, வன்கொடுமை தடுப்பு ஆகிய சட்டங்கள் அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருக்கிற தடைகளைக் கொடுமைகளை நீக்க வந்த சட்டங்கள். ஆனால், சுயமரியாதைத் திருமணச் சட்டமோ சாதியற்ற சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதற்குப் புதிய வழிமுறையை வகுத்த சட்டம் என்கின்ற வகையில், இந்தியாவிலேயே முதன்மையானதும் இன்று வரை இணையற்றதும் ஆகும்.
ஒன்றிய அரசின் சிறப்பு திருமணச் சட்டத்திற்கும் இதற்குமுள்ள வேறுபாடு என்னவென்றால், சிறப்பு திருமணச் சட்டத்தில் 30 நாட்கள் நோட்டீசு கட்டாயம். சமுதாயத்தை எதிர்த்துத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இது சாத்தியமற்ற ஒன்று. பல இடங்களில், பதிவர்கள் பெற்றோர் சம்மதம் கேட்கிறார்கள். ஆனால், சுயமரியாதைத் திருமண சட்டத்தில் இந்தத் தடையில்லை. சமுதாயத் துறையில் சாதி ஒழிப்பிற்கு தி.மு.க. ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்பு இதுவாகும்.
சுயமரியாதைத் திருமணத்தை சாதி ஒழிப்பிற்கான கருவியாகவே பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டுவந்தார்கள் என்பதை அவருடைய வார்த்தைகளிலேயே நாம் காணலாம். முகுகுளத்தூர் கலவரம் பற்றி அண்ணா பேசும்போது சொன்ன ஒரு கருத்தை நாம் கவனிக்க வேண்டும்.
“25 ஆண்டுகளாக நான் பொதுவாழ்வில் இருக்கிறேன். பரமக்குடிக்கு அப்பால் போய்ப் பேசியதில்லையே… அங்கெல்லாம் கழகம் பரல வில்லையே என வருந்தியிருக்கிறேன். அந்தப் பகுதியில் சுயமரியாதை இயக்கம் பரவியிருந்தால், கலப்புத் திருமணங்கள் அதிகமாக நடந்திருக்கும், சாதி துவேசங்கள் குறைந்திருக்கும்.”
சாதி ஒழிப்பின் ஆயுதமாக சுயமரியாதைத் திருமணத்தைப் பார்த்தார், அண்ணா. அதனால்தான், அவரின் முதல் சட்டமாக அதுவரை நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்கள், சட்டப்படியான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேறியது.
அரசு எந்திரத்தில் மாற்றம்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அரசு இயந்திரத்தைத் தன் வசப்படுத்தி வைத்திருந்த பார்ப்பனர்களின் மேலாதிக்கம், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தன்னுடைய செல்வாக்கோடுதான் இருந்துவந்தது. நீதிக்கட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வியிலும் வேலைவாய்ப்பிலுமான வகுப்புவாரி உரிமை, பொது இடங்களில் அனைத்து சாதி மக்களும் பெற்ற பொதுஉரிமை (சாலையில் நடத்தல் பொதுக்குளங்களில் தண்ணீர் எடுத்தல் போன்றவை) போன்ற மாற்றங்களால் சூத்திர பஞ்சம மக்கள் அரசு இயந்திரங்களுக்குள் கால் பதிக்கத் தொடங்கியிருந்தாலும் அதிகாரிகள் மட்டத்தில் அவர்கள் யாரும் குறிப்பிடத்தக்க அளவில் வந்துவிடவில்லை. எனவே, அரசு அதிகாரிகள் பெரும்பாலும் மேல்தட்டைச் சார்ந்தவர்களாக அதிலும் குறிப்பாக, அதிக அளவில் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள் என்பதுதான் உண்மை.
இந்நிலையில், 1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) வெற்றி பெற்றதானது, தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றின் வரைபடத்தையே மாற்றக்கூடிய வரலாற்றின் பெருநிகழ்வாகத் திகழ்கிறது.

காலையில் 11:30-க்கு சூடாக சாதம் சாப்பிட்டுவிட்டு, ஆத்திலேயிருந்து நிதானமாகக் கிளம்பி 12 மணிக்கு வந்து, அலுவலக மேஜை மேலே வெற்றிலை டப்பாவைத் திறந்துகொண்டு உட்கார்ந்துகொண்டிருந்த அரசு அதிகாரிகள், அவர்கள் மேஜையில் இருந்த கோப்புகளின்மீது கேள்வி கேட்பதற்குத் தங்களுக்கு எதிரே வந்து உட்காரத் தொடங்கிய நீண்ட துண்டு போட்ட கருத்த உருவத்துடன் ஆன மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து வேர்க்கத் தொடங்கினார்கள்.
அண்ணாவின் ஆட்சியில் தங்கள் கோரிக்கைகளுடன் மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலகங்களுக்குள் நேரிடையாக வரத் தொடங்கினார்கள். யாரையெல்லாம் பார்த்து சூத்திரப்பயலே, தள்ளிப்போடா… என்று அவர்கள் அதுவரை பேசிக் கொண்டிருந்தார்களோ அவர்கள், நீண்ட துண்டுகள் புரளப்புரள அவர்களுக்கு முன்னால் நாற்காலிகளை இழுத்துப்போட்டு உட்கார்ந்திருந்தார்கள்
தமிழ் இந்து வெளியிட்ட ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நூலில் பா.ஜ.க கட்சித் தலைவர் வாஜ்பேய் அவர்களின் முன்னாள் பொருளாதார ஆலோசகராக இருந்து ஓய்வுபெற்ற அரசுச் செயலர் எஸ்.நாராயன் அவர்கள் கூறியிருக்கும் விசயங்கள் தரும் சித்திரத்தைக் காண்போம். திராவிட இயக்கத்தவரல்லாத இவரது எழுத்து, நமக்கு உண்மைகளை விளங்கத் தருகிறது.
“பொதுவாக, இங்கு அரசு நிர்வாகத்தில் மாவட்ட நிர்வாகம் மீதும் மாவட்ட ஆட்சியர்கள் மீதுமான சார்பு அதிகமாக இருந்தது. மாவட்ட அளவில் அரசின் கொள்கைகளை அமல்படுத்தும் கரங்களாக ஆட்சியர்கள் இருந்தனர். தமிழ்நாட்டில், 1967-க்குப் பிறகு நிலைமை மாறியது. மாபெரும் மக்கள் இயக்கத்தால் உருவான கட்சி தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது, மக்களுடைய கோரிக்கைகளைக் கேட்பதும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதும் முக்கியம் என்று தி.மு.க கருதியது. கட்சித் தலைமையுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் அதன் மாவட்டச் செயலாளர்கள், அன்றாட நிர்வாகம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் பேசத் தொடங்கினார்கள்.
அதுபோலவே, கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள், மக்கள் சார்பில் கோரிக்கைகளுடன் அதிகாரிகளை அன்றாடம் சந்திப்பதை ஒரு இளம் அதிகாரியாக, அப்போது நான் நேரில் பார்த்தேன். இது மிகப்பெரிய மாற்றம். பாசனத் தேவை, உணவு தானியத் தேவை, பள்ளிக்கூடங்களின் செயற்பாடுகள் இப்படி உள்ளூர் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகளோடு, வழக்கமான நிர்வாகப் பணிநிலைகள் வழியாக வராமல், மக்கள் குறைகளை நேரடியாக எடுத்துச்சொல்லி தீர்க்குமாறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர்.
காலம் செல்லச்செல்ல அண்ணாவுக்குப் பிந்தைய அவருடைய வழித்தோன்றல்களின் காலகட்டத்தில் இது மேலும் தீவிரமானது. இது அதிகார வர்க்கப் பிரச்சனைகளைப் பார்க்கும் கண்ணோட்டத்தையே கூட மாற்றியது.
1960-1980 காலகட்டத்தில், அரசு ஊழியர் தரவுகளை ஆராய்ந்தால், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அரச வேலைக்கு வருவோரின் சாதிப் பின்னணி அடியோடு மாறியிருந்தது. அதிக அளவில் அரசுப் பணிகளில் உள்ளே நுழைந்தனர். இது, அதிகார வர்க்கத்தின் கட்டமைப்பையே மாற்றியது; கூடவே, அதிகார வர்க்கத்தின் பண்பிலும் மாற்றம் உண்டானது.
குறிப்பாக, வருவாய்த் துறையிலும் காவல் துறையிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின சமூகத்தினர் பிரதிநிதித்துவம் அதிகரித்தது. விளைவாக, அரசு நிர்வாகத்தில் பிராமண சமூகத்தினரின் எண்ணிக்கை குறைந்தது. அதே சமயம், மக்கள்தொகையில் அந்தந்த சமூகத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைகளில் வேலைவாய்ப்பு என்ற சூழலாக இது மாறியது. ஆக, அதிகார வர்க்கம் பன்மைத்துவம் பெற்றது. இது, மிக முக்கியமான ஒரு மாற்றம். 1925ல் காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் வலியுறுத்திய சமூகரீதியிலான விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை இந்த மாற்றம் பிரதிபலித்தது.” (மாபெரும் தமிழ்க் கனவு பக்கம் எண் 79 81)
மேலே தரப்பட்டுள்ள கூற்று, திராவிட இயக்கத்தவருடையதோ திராவிட இயக்க சார்புடையவருடைய கூற்றோ அல்ல. முற்றிலுமாக திராவிட இயக்கத்துக்கு வெளியே இன்னும் சரியாக சொல்லப்போனால், மாற்று முகாமிலிருந்து வந்திருக்கும் கருத்துப் பதிவும் உண்மையுமாகும் இது.
ஆங்கிலம் என்கின்ற அரண்
இன்று, தமிழர்கள் உலகெங்கிலும் சென்று சிறப்புற்றிருப்பதற்குப் பாதை அமைத்தது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து போராடி உறுதிசெய்த இருமொழிக் கொள்கைதான் என்பதை ஒருவர் மொழி சார்ந்து அல்ல இம்மண்ணின் வரலாறு சார்ந்தே புரிந்து கொள்ள இயலும். தமிழை நீசமொழியாக்கிய இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்திலிருந்து தமிழை, தமிழர்களை, இந்த சமஸ்கிருத்தால் சூத்திரர்களாக்கப்பட்ட இம்மண்ணின் மக்களைக் காக்க ஆங்கிலத்தை அரணாக வைத்தது என்பது தன்னிகரற்ற சரியான திசைவழியாகும்.
அதனை இம்மக்களுக்கு உறுதிசெய்த தன் காரணமாகவே இன்று கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குறிப்பாக, தனியார் வேலைவாய்ப்புகளில் நவீன தொழில்நுட்பக் கல்வியில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் வாய்ப்பு பெற்றார்கள். சாதி அமைப்பு அவர்களிடம் தோற்கலாயிற்று.
சூத்திரர்களின் ஆட்சி கலைஞரின் சங்கநாதம்
பேரறிஞர் அண்ணாவைத் தொடர்ந்து இப்பேரியக்கத்தின் உயிர் மூச்சாக எத்தனையோ பிளவுகள், தோல்விகள், தடைகள், நெருக்கடி கால கொடுமைகள் வந்தபோதும் அனைத்தையும் தாங்கிய இடிதாங்கியாக இருந்து இயக்கத்தைக் காத்திட்ட வரலாற்று நாயகர், கலைஞர் கருணாநிதி. அறிஞர் அண்ணாவுக்கும் கலைஞர் அவர்களுக்கும் முன்பாகவே சிலபல பார்ப்பனரல்லாத, தலித் சமுதாயத் தலைவர்கள் மாநில முதல்வர்களாகியிருக்கிறார்கள். ஆனால் இது சூத்திர இயக்கம், இது சூத்திர ஆட்சி, நாங்கள் சூத்திரர்கள், இந்த நாட்டின் பார்ப்பனத் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று பறையறிவித்து வந்தவர்கள், இந்தியாவிலேயே முதன்மையானவர்கள், அறிஞர் அண்ணாவும் கலைஞரும்தான்.

விரிவுபடுத்தப்பட்ட சாதி இடஒதுக்கீடு
இட ஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்திய பெருமை, இந்தியாவிலேயே தமிழகத்திற்கு மட்டும்தான் உண்டு. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் வரும்வரை இந்தியா சிந்திக்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால், இன்று பல்வேறு மாநிலங்கள் இந்த விசயத்தில் விழிப்புணர்வு பெற்றுவருகின்றன. அத்தகைய மாநிலங்களுக்கெல்லாம்கூட வழிகாட்டியாகவும் ஆதாரமாகவும் தமிழ்நாடு இருப்பதற்கு திராவிட இயக்க ஆட்சியாளர்களே முழுப் பெருமையை எடுத்துக்கொள்ள முடியும்.
உள் ஒதுக்கீடு
அது மட்டுமின்றி, இயங்கியல் அடிப்படையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதையும் உள்வாங்கி, அதிக அளவில் பின்தங்கியிருக்கும் சாதிப் பிரிவினரை இனங்கண்டு, அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்கியதும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கின்ற உட்பிரிவை அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத் தகுந்த வரலாறாகும்.
போக்குவரத்து
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தைப் பெருமளவு விரிவாக்கி, அதனை முழுமையாக மக்கள் சேவையாக மாற்றியது, கலைஞர் அரசு. இதனாலேதான், தமிழகத்தின் குக்கிராமங்களுக்கும் சாலைகள் போடப்பட்டன. சாலைகள் மின்விளக்குகளைக் கோரின. இந்தியாவை முழுமையாக மின்மயமாக்கிட மோடி அறைகூவல் விடுத்து, தமிழகத்தைப் பார்த்தபோது, இங்கு தமிழகம் முழுமையாக மின்னொளியில் ஒளி விட்டுக்கொண்டிருக்கிறது. இந்தச் சாலைகள் வெறும் போக்குவரத்துத் தொடர்புடையவை மட்டுமல்ல. கிராமங்களுக்குள் தங்கள் சாதிய அடிமை வாழ்வைச் சுமந்துகொண்டு முடங்கிக்கிடந்த மக்களுக்கு வெளி உலகின் வாசல்களைத் திறந்துவிட்டவையும் இவைதான்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் போன்ற திட்டங்கள் பெண்களின் நலன், சாதி ஒழிப்பு என்கின்ற இரட்டை இலக்குகளோடு நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைகள் உருவாக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்குத் தனிக்கவனம் அளிக்கப்படலாயிற்று. குடிசை மாற்று வாரியம், கை ரிக்ஷா ஒழிப்பு போன்ற பல திட்டங்களுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் தமிழகமே முன்னோடியாகும். கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம் திட்டம் மிகச் சிறப்பான சாதிஒழிப்புத் திட்டமாகும்.
நிலச் சீர்திருத்தங்கள்
நில உடைமை என்பது சாதி அமைப்புடன் இறுக்கமான தொடர்புடைய அமைப்பாகும். இதன்மீது தாக்குதல் கொடுக்காமல், நில உடைமை சார்ந்த உறவுகளை மாற்றி அமைக்காமல், சாதி அமைப்பை முற்றிலும் தகர்ப்பது இயலாத ஒன்றாகும். சாதி அமைப்பை அடிப்படை அலகாக எடுத்துக்கொள்ளாமல் வர்க்க அடிப்படையை முதன்மையாகவும் அடிக்கட்டுமானமாகவும் பார்க்கும் இந்திய பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் கேரளம், மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்கள் நில மறுபகிர்வில் இந்தியாவிலேயே முன்னோடியான மாநிலங்களாகக் கருதப்படுகின்றன.
அம்மாநிலங்களுக்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு நில உச்சவரம்பைக் குறைத்து, சமூக சமத்துவத்தை உருவாக்கும் உரிமைக்கான சட்ட மாறுதல்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. நில கொள்கைகளை வலுவாகச் செயல்படுத்தியுள்ளது. குத்தகைதாரர்கள் உடைமை உச்சவரம்பை 15 ஏக்கராகக் குறைத்து, நிலமற்றோருக்கு நிலம். வழங்கும் திட்டம், சாதி ஒழிப்பில், நிலப்பிரபுத்துவ ஒழிப்பில் முக்கிய மைல்கல் சாதனை.
தி.மு.க. உருவாக்கிய தலித் ஆளுமைகள்
தலித் சமுதாயத்தவர் என்கின்ற அடிப்டையிலும் பெண் என்கின்ற அடிப்படையிலும் தி.மு.க.வில் சத்யவாணி முத்து அம்மையாரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்திய அரசியலிலேயே இவரது அரசியல் இயக்கப் பயணம், ஒரு பெண் என்கின்ற அளவிலும் தலித் பிரதிநிதி என்கின்ற அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அன்று சத்தியவாணி முத்து தொடங்கி, இன்று ஆ. இராசா வரை தலித் மக்கள் பொதுத் தலைவர்களாக உருவாவதற்கான களம், தி.மு.க.வில் இருந்தே வருகிறது. மேலும், தலித் இயக்கங்களுடன் கொள்கைக் கூட்டணியைத் தொடர்வதில் தி.மு.க. வழுவாமல் இருந்துவருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் சாதி அமைப்பைக் கடுமையாகத் தாக்கி வலுவிழக்கச் செய்திருக்கிறது என்பதையோ, நான்காயிரம் ஆண்டு கெட்டிதட்டிப்போன சாதி அமைப்பின்மீது சரியான சம்மட்டி அடியைத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தந்திருக்கிறது என்பதையோ வரலாற்றில் யாரும் மறுத்திட இயலாது.
இன்று, இக்கொள்கைகளைச் சமரசமின்றி எடுத்துச்சென்று கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் சனாதனமே எங்கள் எதிரி என்று தம் இயக்க நெறி காக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஒரு நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இயங்கி, சாதி ஒழிப்பு என்கின்ற பாதையில் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். திராவிடத்தின் பயணத்தில் தமிழ் வெல்லும்; சாதி ஒழியும்!
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!


