ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் காலிங்கராயரின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் போட்டி தேர்வு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


ஈரோடு மாவட்டத்தில் 744 ஆண்டுகளுக்கு முன்பு நதிநீர் இணைப்பிற்கு முன்னோடியாக பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து வாய்க்கால் வெட்டி பாசனம் வசதி ஏற்படுத்தியவர் மன்னர் காலிங்கராயர். அவரை கௌரவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயர் முழு உருவ வெண்கல சிலை மற்றும் அதன் கீழ் போட்டித் தேர்வு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மேற்கு மண்டலம் வளம்பெற பவானியையும், நொய்யலையும் இணைத்த நதிநீர் இணைப்பின் முன்னோடியான காலிங்கரின் திருவுருவ சிலையை திறந்து வைத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனையொட்டி ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி. சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாஜலம், ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


