பெருமாள்முருகன் 
திராவிட இயக்கத்தின் இலக்கியப் பங்களிப்பை நவீன இலக்கியச் செயல்பாடு, பழந்தமிழ் இலக்கியப் பரவலாக்கம் என இரு வகைகளில் பிரித்துப்பார்க்கலாம். கி.மு.வில் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றைத் தமிழ்மொழி பெற்றிருக்கிறது. தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கிச் சிற்றிலக்கியம் வரை நூற்றாண்டுவாரியாகப் பழந்தமிழ் இலக்கிய வரலாற்று வரிசை இப்போது நிலைபெற்றிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியிலும் இத்தகைய நிலைபேற்றுக்கான ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடந்தன. பல நூல்களை எழுதினர். ஒவ்வொரு வகையான பழந்தமிழ் இலக்கியத்தையும் பரப்புவதில் ஒவ்வொரு பிரிவினர் முன்னின்றனர்.
குறிப்பாக, பக்தி இலக்கியத்தைப் பரப்புவதில் அந்தந்த மதப் பிரிவைச் சார்ந்தவர்கள் பெரிதும் கவனம் செலுத்தினர். பன்னிரு திருமுறைகள் பரவலாவதற்குச் சைவ மடங்கள் தொடர்ந்து அவற்றை வெளியிட்டதும் சைவர்கள் போற்றியதும் காரணமாயிற்று. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் வைணவர்கள்மூலம் பரவிற்று. சமணம் சார்ந்த நூல்கள் அம்மதம் சார்ந்தவர்களிடம் வழக்குப் பெற்றிருந்தது. ‘சீவக சிந்தாமணி’ யைப் பதிப்பிக்கும் பணியில் உ.வே.சாமிநாதையர் ஈடுபட்டபோது, கும்பகோணத்தில் வசித்துவந்த சமணர்கள், அந்நூலைப் பாராயணம் செய்துவந்ததை அறிந்து, அவர்களிடம் பல ஐயங்களைப் போக்கிக்கொண்டார். பொதுவெளியில் போற்றுதல் இல்லாத சிந்தாமணி, சமண மதம் சார்ந்தவர்களிடம் பெருவழக்குப் பெற்றிருந்தது. பெளத்தம் சார்ந்த நூல்கள் போற்றுவாரின்றிப் போனதால், சில கிடைத்தும் சில அழிந்தும் போயின.

பழந்தமிழ் இலக்கியத்தில் திராவிட இயக்கம் கவனம் செலுத்தியவற்றுள் முதன்மையானது, சங்க இலக்கியம். அதில் கடவுள் பற்றிய குறிப்புகள் வெகுகுறைவு. அவையும் கடவுளைப் போற்றுபவை அல்ல. மதங்கள் நிறுவனமயப்படாத காலத்து, நடுகல் வழிபாடு உட்படப் பன்முகக கடவுள் வழிபாட்டைச் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தின் பாடுபொருள் கடவுள் அல்ல; காதலும் வீரமும்தான். சங்க இலக்கியத்தில் இந்த அடிப்படைக் கூறுகள். திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு இணக்கமாக அமைந்தன. தமிழர்களின் தனித்தன்மையை எடுத்துப் பேசுவதற்கும் தமிழர்களின் வரலாற்றை நிறுவுவதற்கும் சங்க இலக்கியம் பெருஞ்சான்றாக அமைந்தது.
குறிப்பாக, தமிழரின் தொன்மை வரலாற்றைப் பேசுவதற்குப் புறநானூறு பெரிதும் உதவியது. தமிழ் மன்னர்களின் வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, அறங்கள், குடும்ப வாழ்வு எனப் பல்வேறு பண்புகளைப் புறநானூறு போற்றிப் பேசுகின்றது. அக்காலத் தமிழர் வீரம் பற்றியும் அதில் மக்கள் பங்கு பற்றியும் கூறும் பாடல்கள் உள்ளன. பல பாடல்கள் சம்பவங்களை விவரிக்கின்றன; அவை கதையாக எடுத்துப் பேசுவதற்கு வாகானவை. ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ போன்ற அருமையான தொடர்கள் பலவற்றையும் புறநானூறு கொண்டுள்ளது. தமிழர் வாழ்வியல் கொள்கைகளைக் கட்டமைப்பதற்கு இத்தகைய தொடர்கள் உதவுபவை. ஆகவே, சங்க இலக்கியத்திலும் திராவிட இயக்கத்தின் முதன்மை நூலாகப் புறநானூறு விளங்கியது.
திராவிட இயக்க மேடைப் பேச்சில் புறநானூற்றுத் தொடர்களும் சம்பவங்களும் தொடர்ந்து எடுத்துக்காட்டப்பட்டன, விவரிக்கப்பட்டன. 1894ல் முதன்முதலாகப் புறநானூற்றை உ.வே.சாமிநாதையர் பதிப்பித்தார். அதுமுதல் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் புறநானூற்றில் கவனம் செலுத்தி, எடுத்து விவாதித்து, அதன் முக்கியத்துவத்தை நிறுவியிருந்தனர். எனினும் அதைப் பொதுமக்களிடம் பரவலாக்கியதில் திராவிட இயக்கத்தின் பங்கு பெரிது. இன்று வரைக்கும் புறநானூற்றுக்குக் கிடைத்துவரும் முக்கியத்துவத்திற்குத் திராவிட இயக்கம் முக்கியமான காரணம் என்றால் மிகையாகாது.
சங்க இலக்கிய அகப்பாடல்களிலும் வரலாற்றுக் குறிப்புகள் மிகுந்துள்ளன. ஆகவே, அவையும் தமிழர் வரலாற்றைக் கட்டமைப்பதற்குச் சான்றுகளாயின. ஓர் இனத்தின் சிறப்புகளைப் பேசுவதற்கு வரலாறு மட்டும் போதாது; அதன் வாழ்வியலும் முக்கியம். அவ்வகையில் தமிழரின் காதல் வாழ்வைப் பலபட எடுத்துக்காட்டச் சங்க இலக்கிய அகநூல்கள் பெரிதும் உதவின. அவற்றையும் திராவிட இயக்கம் பயன் கொண்டது. சங்க இலக்கியப் பரவலாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இவ்வகையில் இன்னும் விரிவான ஆய்வுக்குரியது.
கலைஞர் மு.கருணாநிதி எழுதிப் புகழ்பெற்ற ‘சங்கத்தமிழ் நூல் (1987, சென்னை, ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ்) இத்தகைய ஆய்வுக்கு முக்கியமான சான்றாதாரம் ஆகும். அதில் நூறு கட்டுரைகள் உள்ளன. அவற்றை ஒரு வசதிக்காகக் ‘கட்டுரைகள்’ என்று குறிப்பிடுகின்றேன். கட்டுரை, புதுக்கவிதை, இசைப்பா எனப் பல வடிவங்களைப் பயன்படுத்திச் சங்க இலக்கியப் பாடல்களை கலைஞர் விளக்கியுள்ளார். நூற்றில் நாற்பத்தெட்டு புறநானூற்றுப் பாடல்களுக்கான விளக்கம். நூலில் கிட்டத்தட்ட சரிபாதி. ஒரு கட்டுரையில் பன்னிரண்டு புறநானூற்றுப் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளார்.
புறநானூற்றின் நானூறு பாடல்களில் இருந்து எழுபது, எண்பது பாடல்களை எடுத்தாண்டுள்ளார். அவை சங்கத் தமிழரின் வீரம், கொடை உள்ளிட்ட நற்பண்புகளைப் பேசுபவை, எந்தெந்தப் பாடல்களை அவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதும் சுவையானது. சங்க இலக்கிய அகநூல்கள் பலவற்றிலிருந்து காதல் பாடல்களை எடுத்துக்கொண்டவர், அவற்றுக்கு நிகராகப் புறநானூறு ஒரு நூலில் இருந்து மட்டும் பாடல்களை எடுத்துள்ளார். மேடையுரைகளில் சங்க இலக்கியப் பரப்பலைச் செய்த திராவிட இயக்கம், அதை ஆவணப் திராவிட இயக்கத்தவர் எழுதிய சங்க இலக்கியம் தொடர்பான பதிவாகவும் உருவாக்கியமையைச் ‘சங்கத் தமிழ்’ நூல் காட்டுகிறது. நூல்களையும் எடுத்து ஆராய்வது இப்பரவலாக்கத்தை முழுமையாக உணர உதவும்.
சங்க இலக்கியத்திற்கு நிகராக அல்லது அதற்கு மேலாகவும் திருக்குறள் பரவலாக்கத்தைத் திராவிட இயக்கம் செய்திருக்கிறது . ‘விவேகானந்தர் பாறை’ என்று அடையாளப்பட்டிருந்த குமரிமுனையை, ‘அய்யன் திருவள்ளுவர் சிலை’யின் அடையாளமாக்கியது, வள்ளுவர் கோட்டம் உருவாக்கியது, கடற்கரை உள்ளிட்ட பலவிடங்களில் திருவள்ளுவருக்குத் சிலை நிறுவியது, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதிப் பரப்பியது ஆகியவை திராவிட இயக்க ஆட்சிக் காலத்தின் பருண்மைச் சான்றுகள் திருக்குறளுக்கு உரை எழுதிய திராவிட இயக்கத்தவர் எண்ணிக்கை கணிசம். புலவர் குழந்தை உரை தொடங்கி, கலைஞர் உரை வரைக்கும் எடுத்தால் பல உரைகள் உள்ளன. பிறர் உரைகளில் இருந்து திராவிட இயக்கத்தவர் உரைகள் வேறுபட்டவை. திருக்குறள் குறித்து எதிர்மறைக் கருத்துகளைக் கொண்டிருந்த பெரியாரிடம் அதைப்பற்றி விளக்கி, அவர் கருத்தையும் மாற்றிக்கொள்ளச் செய்தனர் என்றொரு கருத்து உண்டு.
கலைஞர் எழுதிய குறளோவியம்’ (1985, சென்னை, பாரதி பதிப்பகம் நூலும் மிக முக்கியமானது. முந்நூறு குறளோவியங்கள் இந்நூலில் உள்ளன. அறத்துப்பாலில் 76, பொருட்பாலில் 137, இன்பத்துப் பாலில் 141 என 354 குறள்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாத காலத்தில் குறளோவியம்,சங்கத் தமிழ் ஆகியவற்றைக் கலைஞர் எழுதினார். இருபதாம் நூற்றாண்டில் பழந்தமிழ் இலக்கியப் பரப்பலில் ஈடுபட்ட திராவிட இயக்கத்தில் எழுத்தாவணப் பதிவு என்றே இவ்விரு நூல்களையும் காணலாம்.
திருக்குறள் பரவலாக்கத்தில் நடந்த மிக முக்கியமான விஷயம். அந்நூலை மதவாதிகளிடம் இருந்து மீட்டமை ஆகும். திருக்குறளைத் தம் நூலாக ஆக்கிக்கொள்ள, சைவ சமயம் பல நூற்றாண்டுகளாக முயன்றுவந்திருக்கிறது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் உடல் முழுவதும் திருநீறு பூசிய திருவள்ளுவர் உருவங்களை அச்சு நூல்களில் காணலாம். இன்றும் இந்த முயற்சி தளர்ந்துவிடவில்லை. இந்து மத திருவள்ளுவர் சிலைகளுக்குக் காவிச்சாயம் பூசுதலும் மேற்கொள்கின்றனர் அடிப்படைவாதிகள் திருவள்ளுவருக்குக் காவியுடை அணிவித்தலும் இத்தகைய மதவாதிகளின் கையில் திருவள்ளுவரைத் தாரைவார்த்துவிடாமல் தொடர்ந்து காப்பாற்றிவருவது, திராவிட இயக்கமும் அதன் கருத்தியல் வலுவும்தான்.
எந்த மதச் சின்னமும் அணியாத திருவள்ளுவர் உருவத்தை வரைந்தும் சிலைகளாக நிறுவியும் நிலைப்படுத்தியது திராவிட இயக்கம். கடவுள் வாழ்த்து அதிகாரம் உள்பட எவ்விடத்திலும் எந்தக் கடவுள் பெயரையும் வெளிப்படச் சொல்லாத திருக்குறளை மதம் கடந்த பொதுமறையாக உயர்த்தியது, திராவிட இயக்கம். சாதிக்கு எதிராகப் பேசும் இடங்களில் எல்லாம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் திருக்குறள் தொடரை முன்னிறுத்தியது திராவிட இயக்கம். மனுநீதி உள்ளிட்ட சமஸ்கிருத நூல்களின் கருத்துகளை எதிர்கொள்ள, இந்த ஒரே ஒரு தொடர் வலுவான ஆயுதமாக விளங்குகிறது.

காப்பியங்களில் திராவிட இயக்கம் பெரிதும் கவனம்செலுத்திய நூல் சிலப்பதிகாரம். சேர சோழ பாண்டிய நாடுகளைக் களமாகக் கொண்டு ‘தமிழ்நாடு’ என்னும் பொருண்மையில் கதைப் பின்னணியை அமைத்ததால், திராவிட இயக்கக் கருத்தியலுக்குச் சிலப்பதிகாரம் பொருந்திற்று பெரியாருக்கு உவப்பான நூலாகச் சிலப்பதிகாரம் இல்லை. எனினும், திராவிட இயக்கம் அக்காப்பியத்தில் கவனம் கொள்ளப் பல காரணங்கள் இருந்தன.
வடமொழிச் சார்போ புராணப் பின்னணியோ இல்லாத ‘தமிழ்க் காப்பியம்’ என்னும் சிறப்புப் பெற்ற நூல் அது. அதில் வரும் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளுக்குத் தர்க்க விளக்கம் கொடுத்துச் சிறுமாற்றங்கள் செய்து, கலைஞர் எழுதி உருவான ‘பூம்புகார்’ திரைப்படம், கடற்கரையில் சிலம்போடு ஆவேசமாக நீதி கேட்டு நிற்கும் கண்ணகி சிலை, பூம்புகாரில் அமைத்த கோட்டம் முதலியன பருண்மைச் சான்றுகள் . தம்பிக்குத்தான் அரசப் பதவி என்னும் ஜோதிடத்தைப் பொய்யாக்கத் துறவு மேற்கொண்ட இளங்கோவடிகள் கதையும் திராவிட இயக்கம் அந்நூலில் கவனம் கொள்ள வலுசேர்த்தது.
18-08-1985 அன்று மன்னார்குடி இலக்கிய வட்டத்தின் மூன்றாவது ஆண்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரை ‘இலக்கிய விருந்து’ (கஸ்தூரி பதிப்பகம், சென்னை, 1985) என்னும் தலைப்பில் சிறுநூலாக வெளியாயிற்று. அவ்வுரையில் சங்க இலக்கியம், திருக்குறள் ஆகிய இரண்டைப் பற்றி மட்டுமே விரிவாகப் பேசுகிறார். அதன்பின் நேரடியாக பாரதியார், பாரதிதாசன் என நவீன காலத்திற்கு வந்துவிடுகிறார். ‘இந்தப் பழங்காலப் பரம்பரைக்குப் பிறகு, ஓர் இடைவெளிக்கு அடுத்து, எளிய நடையில் அதே நேரத்தில்…
தலைநிமிர்ந்து பாடிய கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியார் என்று ஒரே தாவலில் பாரதியாரிடம் வந்துவிடுகிறார். பல நூற்றாண்டுகள் கொண்ட இடைப்பட்ட பெருங்காலத்தை ‘ஒரு இடைவெளி’ என்று கடந்துவிடுகிறார். அந்த இடைவெளி முழுக்கவும் பக்தி, மதம் சார்ந்த இலக்கியங்கள் கோலோச்சிய காலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வுரையில், சங்க இலக்கியத்திலிருந்து அகப்பாடல்களையும் புறப்பாடல்களையும் எடுத்துக்காட்டிச் சுவையாக விளக்குகிறார். அவ்வுரையில், அறிஞர் அண்ணாவின் முன்னிலையில் கலைஞருக்கும் பேராசிரியர் அன்பழகனுக்கும் நடைபெற்ற அகம், புறம் விவாதத்தை அண்ணா முடித்துவைத்த சம்பவத்தையும் கூறுகிறார். ‘புறம் என்பது பகிர்ந்துகொள்ளக்கூடியது; அகம் என்பது பகிர்ந்துகொள்ள முடியாதது என்பது அண்ணா தரும் விளக்கம். அவ்வுரையில், சங்க இலக்கியம் பற்றி கலைஞர் கூறும் சில கருத்துகள்:
‘சங்க இலக்கியங்கள் அக்கால மக்களுடைய வாழ்நிலையை இன்றைக்கும் எடுத்துக் காட்டுகின்ற வரலாற்றுக் குறிப்புகளாக நமக்குக் கிடைத்திருக்கின்றன.
‘சங்க இலக்கியங்களைக் கொண்டுதான் தமிழ்நாட்டிலே பழங்கால மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், எத்தகைய பண்பாடுகளைக் கடைப்பிடித்தார்கள், எத்தகைய வாழ்க்கை முறைகள் அவர்களுடையது என்பதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
உலகத்திலேயே தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை இரு கூறாகப் பிரித்துக்கொண்டு, அதற்கு இலக்கியம் உருவாக்கிக்கொண்டு வாழ்ந்தவர்கள்!
அதன் தொடர்ச்சியில் திருக்குறளைப் பற்றி அவர் கூறுவது:
சங்கம் மருவிய நூல் என்றும் ஆனால், தமிழர்களுடைய மறை நூல் என்றும் போற்றப்படுகின்ற திருக்குறள், உலகத்திற்கே வாழ்க்கை நெறியை வகுத்துத் தந்த நூல்!
இந்த இலக்கிய உரையை அவர் ஆற்றிய காலத்தில்தான் ‘குறளோவியம் எழுதி முடித்திருந்தார். ‘சங்கத்தமிழ்’ எழுதிக்கொண்டிருந்தார். அவற்றின் தாக்கம் இவ்வுரையிலும் எதிரொலிக்கிறது. எனினும், திராவிட கவனம் செலுத்திய பழந்தமிழ் நூல்கள் எவை என்பதற்கும் இவ்வுரை சான்றாகிறது.
சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய பழந்தமிழ் நூல்களின் பரவலாக்கத்தைத் திராவிட இயக்கம் நேரடியாகச் செய்தது. வேறு சில நூல்களின் பரவலாக்கத்திற்குத் திராவிட இயக்கம் மறைமுகக காரணமாக இருந்தது என்பதையும் கருதிப்பார்க்க வேண்டும். கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய இரு நூல்களும் தமிழர் நலனுக்கு எதிரானவை; அவற்றைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் எனத் திராவிட இயக்கம் போராட்டத்தைக் கையிலெடுத்தது. 1930-களின் இறுதியில் தொடங்கி 1940-களில் இப்பரப்புரையைத் திராவிட இயக்கம் வலுவாகச் செய்தது. அறிஞர் அண்ணா ‘கம்பரசம்’ எழுதினார். தமிழ் அறிஞர்கள் சிலருடன் மேடையில் விவாதம் செய்தார். கம்பராமாயணத்தில் ஆபாசமான பகுதிகளை எடுத்துக்காட்டியும் அதில் திராவிட இனத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பதைக் குறிப்பிட்டும் பேசினார். பெரியாரும் தொடர்ந்து கம்பராமாயணத்தை விமர்சித்துப் பேசிவந்தார்.
தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று அவர்கள் பேசியது கம்பராமாயண அன்பர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எத்தகைய அதிர்ச்சி ஏற்பட்டது.என்பதைப் பற்றி அண்ணா கூறுகிறார்: ‘கலையை அழிக்கின்றனர், கம்பர் கலையிலே தேர்ந்து, அதிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, கம்பனின் புகழை மறைக்கின்றர் என்று கூறப்படும் பழிச்சொல்லை நாங்களறிவோம். ராமாயணமும் சேக்கிழாரின் பெரியபுராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் போரால், ஒரு அண்ணாதுரையின் அனலால் அக்கலை அழிந்துபடும் என்று கருதுவரேல், அவ்வளவு சாமான்யமானது கலையாகாது. அத்தகைய கலை இருத்தலுமாகாது என்றுரைக்க ஆசைப்படுகிறேன்’ (தீ பரவட்டும், ப.11). திராவிட இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தால் எத்தகைய அதிர்ச்சி ஏற்பட்டது என்பதை அண்ணாவின் கூற்றே காட்டுகிறது.
அந்த அதிர்ச்சியின் எதிர்வினை வெளிப்பாடுதான் 1939ஆம் ஆண்டு ‘கம்பன் கழகம்’ என்று காண முடியும். பிறகு, ஒவ்வோர் ஊரிலும் கம்பன் கழகம் உருவாயிற்று. இன்று வரைக்கும் பெயரளவுக்கேனும் கம்பன் கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. 1940-க்குப் பிறகே கம்பராமாயணம் தொடர்பான நயநூல்கள் பல்கிப்பெருகின. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு, மர்ரே பதிப்பு, கம்பன் கழகப் பதிப்புகள் எனக் கம்பராமாயணத்திற்குப் பலவகைப் பதிப்புகள் வெளியாயின.

கம்பராமாயணத்தைக் காப்பதற்கு இவ்விதம் பல பக்கங்களில் இருந்தும் செயல்கள் நடந்தன. பெரியபுராணம் ஏற்கெனவே சைவர்களின் வாசிப்புப் புழக்கத்தில் இருந்த நூல்தாள் எனினும், ‘தீ பரவட்டும்’ என்பதில் பெரியபுராணம் இடம்பெற்ற பிறகு பெரியபுராணப் பதிப்புகள், சொற்பொழிவுகள், உரை நூல்கள், நய நூல்கள் என அதன் பரவலாக்கமும் புத்துயிர்பெற்றது.
இவ்வாறு, பழந்தமிழ் இலக்கியப் பரவலாக்கத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு விரிவானது.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு, முரசொலி: தி.மு.க. இதழியலின் முன்னணி தடங்கள்!



