ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது என்று அர்த்தம் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா விதித்த நிபந்தனைகளுக்கு இந்தியப் பிரதமர் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்: அதாவது, அமெரிக்கா தனது வரிகளை 7 சதவீதம் குறைக்கும், அதே சமயம் இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்காமல், தனது வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும்; மேலும், இந்தியா அமெரிக்காவுடனான தனது வர்த்தக அளவை மேலும் 500 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க வேண்டும். பிரதமரின் இந்தச் செயல், நமது தேசிய நலன்களை அவர் முழுமையாகக் கைவிட்டுவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
இருப்பினும், பிரதமரின் எக்ஸ்தளப்பதிவில், அவர் அமெரிக்காவின் வரிக்குறைப்பு பற்றி மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைத்தது மற்றும் கூடுதலாக 500 பில்லியன் டாலர் இறக்குமதி செய்வது குறித்த உண்மைகளை அவர் மறைத்துள்ளார். இது மக்களுக்குச் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும்.

ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர, ட்ரம்ப் படைகளைக் குவித்தார். இந்தியப் பிரதமரை பணியவைக்க அவர் என்ன செய்தார்? பிரதமர் ட்ரம்புடன் என்ன விவாதித்தார் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளாா்.
மேலும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.
அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் அமெரிக்க என்னென்ன வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.


