சசிகலா சிறைக்கு சென்றபோது தனது உறவினரான தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியது தவறு. தினகரன் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டபோது தான் பிரச்சினை ஏற்பட்டது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.


சசிகலா புதிய அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- சசிகலா புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, முக்குலத்தோர் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட்டு உள்ளார். அவருடைய கணவர் நடராஜன், ராகுல் காந்தியை காண்பித்து பிரதமர் மோடியிடம் அரசியல் செய்தார். அதனால் பல அரசியல் தொல்லைகளை எதிர்கொண்டார். அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தபோது, ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்று தனது வலிமையை காட்டி தான் கட்சியை கைப்பற்றினார். அதற்கு பெரிதும் பாடுபட்டது சசிகலா – நடராஜன்தான். நிர்பந்தங்கள் காரணமாக அரசியலை விட்டு போக இருந்த சசிகலாவை, வெற்றிபெறலாம் என காட்டியது நடராஜன், சசிகலாதான்.
அரசியலில் பெரிய முடிவுகளை ஜெயலலிதா எடுப்பார். சிறிய அளவிலான முடிவுகளை சசிகலா எடுப்பார் என்கிற அளவுக்கு இருவரும் இருந்தார்கள். சசிகலா முக்குலத்தோர் சமுதாயத்திற்கு அரசியலில் பெரும் பங்களிப்பு வழங்கினார். அந்த சமுதாயத்தை சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினார். 5 ராஜ்யசபா இடங்களில் ராஜன் செல்லப்பா, முத்துமணி, தங்கராஜ் பாண்டியன் என 3 பேருக்கு சீட் வழங்கினார். அதனால் அதிமுகவுக்குள் அவருக்கு பெரிய பூஸ்ட் கிடைத்தது.

இன்றைக்கும் சசிகலாவுக்கு முக்குலத்தோர் மக்களிடம் பெரிய ஆதரவு உள்ளது. கமுதி கூட்டத்தில் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் பங்கேற்று அவரது பேச்சை கேட்டது. இன்றைக்கு சசிகலா அனைத்து விவகாரங்களையும் உடைத்துப் பேசுகிறபோது, எடப்பாடி பழனிசாமி மீதான பிம்பம் முக்குலத்தோர் மக்கள் மட்டுமின்றி நடுநிலையானவர்கள் மத்தியிலும் உடைய தொடங்கியுள்ளது. சசிகலா செய்த தவறு என்ன என்றால்? 2021 சட்டமன்ற தேர்தலிலேயே எடப்பாடியை எதிர்த்து அரசியல் செய்திருந்தால் பெரிய தலைவராக நின்றிருப்பார். தற்போது பழைய தாக்கம் இல்லை. எனினும் காலம் கடந்துபோக வில்லை. எடப்பாடி பழனிசாமியை டேமேஜ் செய்ய பெரிய அளவுக்கு சசிகலா இருக்கிறார்.
அவருடைய கணக்கு என்பது, 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோற்றுப் போவார். அதன் பிறகு மீண்டும் தன்னுடைய தலைமையில் அதிமுக வரும் என்பதுதான். அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் சசிகலா காய் நகர்த்துகிறார். அவர் தேர்தலில் போட்டியிட இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் உசிலம்பட்டியில் நின்றால் வெற்றி பெறலாம். இதில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் தான் பெரிய அளவில் டேமேஜ் ஆகும். பரப்பன அக்ரஹார சிறையில் தன்னை கொல்ல எடப்பாடி பழனிசாமி சதி செய்ததாக, சசிகலா கூறியுள்ளார். அந்த நேரத்தில் சீமான் தான் அதை பேசினார்.

சசிகலா, ஓபிஎஸ் குறித்து சசிகலா நல்ல விதமாக பேசியுள்ளார். 2011ல் அதிமுக வேட்பாளர்களை செங்கோட்டையனும், நானும் தான் தேர்வு செய்தோம். அப்போது நான் சொன்ன ஆலோசனையின் பேரில் தான் கிருஷ்ணசாமியை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவியும், கட்சிப் பதவி வழங்கியது சசிகலா தான். அப்போது சசிகலாவுக்கு எதிராக அரசியல் செய்யப் போகிறோம் என்று நாங்கள் சொல்கிறபோது, தன்னால் கட்சி உடைந்ததாக இருக்கக்கூடாது என்று செங்கோட்டையன் மறுத்துவிட்டார். மேலும் சசிகலாவும், செங்கோட்டையனும் இணைந்து அதிமுக தலைமைக்கு வந்துவிடுவார்கள் என்பதால் தான் இரட்டை தலைமையை எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார்.
செங்கோட்டையனுக்கு மீண்டும் பதவி கொடுத்தது சசிகலா தான். அதை பலமுறை அவர் என்னிடம் சொல்லியுள்ளார். தற்போது தவெக – சசிகலா கட்சிக்கு பாலமாக இருந்து செயல்படவும் வாய்ப்புகள் உள்ளன.ஓபிஎஸ் விவகாரத்தில், நடராஜனின் கருத்தை கேட்டு அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் என சொல்லி இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். அந்த இடத்தில் தான் சசிகலாவுக்கு தவறாகி விட்டது. ஓபிஎஸ்க்கு அமைச்சர் பதவி இல்லை என்கிறபோது அவர் தர்மயுத்தம் தொடங்கிவிட்டார். அதை பயன்படுத்தி சசிகலா மீதான வழக்கில் அவருக்கு தண்டனை வழங்க வசதியாகிவிட்டது.

தினகரன் குறித்து சசிகலா பேசாததற்கு காரணம், அவர் தனக்கு போட்டியில்லை என்று சசிகலா நினைக்கிறார். அவர் சிறைக்கு சென்றபோது உறவினரான தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கியதற்கு பதிலாக செங்கோட்டையனுக்கு பதவி வழங்கியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் செங்கோட்டையன் சசிகலாவுக்கு உண்மையாக இருந்திருப்பார். எடப்பாடியையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். டிடிவி தினகரன் முதல்வராக முயற்சிக்கும்போது தான் பிரச்சினை ஏற்பட்டது. கவுண்டர் சமுதாய மக்களிடம் சென்ற முதலமைச்சர் பதவியை எப்படி திருப்பி தருவார்கள் என்று நடராஜனே கூறியுள்ளார்.
எனவே சசிகலாவை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பது, அதன் மூலமாக அதிமுக மீண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று நினைக்கிறார். அன்றைக்கு ஜெயலலிதாவின் தோழி என்கிற அடிப்படையில் சசிகலாவுக்கு செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிசாமி போன்றவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தார். அது அதிகாரத்தை காப்பாற்றுவதற்கான ஏற்பு ஆகும். ஆனால் தற்போது தோல்வியை தழுவி இருக்கும் அதிமுக மற்றொரு தோல்வியை சந்திக்கும்போது சசிகலா தலைமையில் ஒரு ஒன்றிணைவு இருக்கலாம் என அவருக்கு தோன்றலாம். அதற்கு காலம் தான் பதில் சொல்லும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


