ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஜம்முவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பரூக் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர் பி.எஸ்.சௌகான். இவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜம்மு நகரின் புறநகர் பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நேற்றிரவு நடந்தது.
இதில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர்கள், திருமண மண்டபத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், திடீரென ஒரு மர்ம நபர், துப்பாக்கியால், பரூக் அப்துல்லா மீது சுட முயன்றார். இதை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உஷாராகி, அந்த நபரை கீழே தள்ளி துப்பாக்கியை பறிமுதல் செய்ய முயன்றனர். அந்த நேரத்தில், மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர், ஜம்முவில் உள்ள புராணி மண்டி பகுதியை சேர்ந்த கமல் சிங் ஜம்வால் (70) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருமண மண்டபம் அருகே காத்திருந்து, பரூக் அப்துல்லா மற்றும் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெளியே வரும் நேரத்தில் துப்பாக்கியால் சுட முயன்றது என்றும் மது போதையில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கடந்த 20 ஆண்டுகளாக பரூக் அப்துல்லாவை கொல்ல திட்டமிட்டு வந்ததாகவும் இதில் பயங்கரவாத தொடர்பு ஏதுமில்லை என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலின் பின்னணி குறித்து போலீசார் முழுமையாக விசாரித்து வருகின்றனர்.
ஜம்முவில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில், “ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சியை வன்மையாக கண்டிக்கிறேன். ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை; ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பாக இருப்பதை அறிந்து ஆறுதல் அடைந்தேன்” என முதல்வா் பதிவிட்டுள்ளார்.
அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்
