ஞானபீட விருது என் வயதை குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும் என வைரமுத்து தெரிவித்துள்ளாா்.
2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது, இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு 1961 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது அறிவிக்கப்பட்டதையடுத்து கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ”ஞானபீட விருது என் வயதை குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்” என்று அவர் கூறியுள்ளாா். மேலும், ஞானபீட விருது இலக்கியத்துக்குப் பெரிதினும் பெரிது;தமிழுக்கு அரிதினும் அரிது எனவும் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளாா்.

தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலருக்கே இந்த உயரிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1975 ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலனுக்கு, 2002 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர் தற்போது, இந்த விருது வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு விருது கிடைக்கிறது.
தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பெருமை சேர்க்கும் இந்த விருது, வைரமுத்துவின் நீண்டகால இலக்கியப் பங்களிப்பிற்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
