தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மகள் ரக்க்ஷிதா (10). சிறுமி கண்டியூர் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில் நேற்று கண்டியூர் அருகே உள்ள வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு பூச்சொரிதல் விழாவிற்காக சென்றார். அங்கு ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டர் இஞ்சின் அருகே சிறுமி ரக்க்ஷிதா அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தலைமுடி இன்ஜினில் சிக்கி சிறுமியை இழுத்தது. இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக சிறுமியை திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனா். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
