சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும் செல்வப் பெருந்தகை அப்பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பதவி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். கடந்த 2024 பிப்ரவரி 22 மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகையின் பதவி காலம் இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. ஆனாலும் தேர்தலுக்கு பிறகு அவரை நீக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்குதாரராக இருந்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது. இந்த கூட்டணியை பலவீனப்படுத்த வேலை என்று காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு குழுவினர் முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு செல்வப் பெருந்தகை சிறிதும் இடம் கொடுக்கவில்லை.

2026 சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் பங்கேற்ற செல்வப் பெருந்தகை திமுகவிற்கு சாதகமாக நடந்துக்கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர், பிரவின் சக்கரவர்த்தி, ஜோதிமணி மற்றும் சில நிர்வாகிகள் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். ஒருவேளை எதிர்பார்த்த சீட் கிடைக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்கள்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கான பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி 28 தொகுதிகளை பெற்று திமுக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் மீது தொடர்ந்து மேலிடத்தில் புகார் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ராகுல் காந்தியும் சிலர் பேச்சை நம்பி செல்வப் பெருந்தகை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஸீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் செல்வப் பெருந்தகை தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என்று மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
மணிமங்கலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கு.செல்வப்பெருந்தகை தனது படிப்பை முடித்த பிறகு ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்தார். அந்தத் தருணத்தில் பூவை மூர்த்தியால் துவக்கப்பட்ட அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணியில் (APLF) இணைந்து செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பு பிறகு புதிய பாரதம் கட்சியாக மாறியபோது அதில் தொடர்ந்தார்.
இதற்குப் பிறகு அங்கிருந்து வெளியேறி புதிய தமிழகம் கட்சியில் சில காலம் செயல்பட்டார். அந்தத் தருணத்தில் ஒரு விபத்தில் அவருக்கு கால் முறிந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருந்த தொல். திருமாவளவன் அவரைச் சென்று பார்த்தார். அதற்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் செல்வப்பெருந்தகை சேர்ந்தார். கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். ஆனால் இதற்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் வி.சி.கவிலிருந்து விலகினார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல்வப்பெருந்தகை, அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2010 ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகிய செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு பட்டியலினப் பிரிவின் மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செங்கம் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பழனியைவிட சுமார் பத்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கு. செல்வப்பெருந்தகையின் வளர்ச்சி மிக வேகமாக இருந்ததாகவே சொல்லவேண்டும். 2021-ல் கு.செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான தருணத்தில் அவருக்கு சட்டமன்றக் கட்சிக்குள் சீனியராக விஜயதரணி, ராஜேஷ் குமார் போன்றவர்கள் இருந்தார்கள். இருந்தபோதும் சட்டமன்றக் கட்சித் தலைவர் வாய்ப்பு செல்வப்பெருந்தகைக்குக் கிடைத்தது. தமிழக சட்டசபையின் பொதுக் கணக்கு குழு தலைவராகவும் கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.
இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் செல்வப்பெருந்தகை. இளையபெருமாள், மரகதம் சந்திரசேகரைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்றாவது தலைவர் செல்வப்பெருந்தகை என்பது குறிப்பிடத்தக்கது.
