மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான ‘அனுமன் சிலை’ திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய் தோரியா கோவிலில், 51 அடி உயர பிரம்மாண்டமான ‘அனுமன் சிலை’ ஒன்று திறக்கப்பட்டது. இந்த அனுமன் சிலை அதன் பிரம்மாண்டமான அளவாலும் நேர்த்தியான கலைத்திறனாலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பிரமாண்டமான அனுமன் சிலையானது தங்கம், வெள்ளி உள்ளிட்ட 8 உலோகங்களால் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.
இந்தியாவில் புனிதச் சிலைகளை உருவாக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும், 8 உலோகங்கள் கலந்த பாரம்பரிய கலவையான ‘அஷ்டதாது’ எனும் உலோகக் கலவை, 171 குவிண்டால் அளவில் இந்த பிரமாண்ட சிலையை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அஷ்டதாதுவின் நீடித்து உழைக்கும் தன்மையாலும், அதன் ஆன்மீக முக்கியத்துவத்தாலும், சமய மரபுகளில் இந்த உலோகத்தைப் பயன்படுத்துவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இந்த பெரிய அனுமன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்ய பெருந்திரளான பக்தர்கள் குவிந்தனர். சத்தர்பூரில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இந்தச் சிலை திறப்பு அமைந்தது. அதே போல இந்த பெரிய அனுமன் சிலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாகியுள்ளது. முழுமையாக ‘அஷ்டதாது’ கொண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் அனுமன் சிலை இதுவே என்றும் ஆன்மீக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த பிரமாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டிருப்பதால் உள்ளூர் மக்கள், பக்தர்கள் மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளனர். இச்சிலையை அமைக்கும் பணியை மேற்கொள்ள, கோவிலின் தலைமைப் பூசாரியான பகவான் தாஸ் சிங்காரி அவர்கள் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவிலுக்கு வரும் காணிக்கைகள் மற்றும் கோவிலுக்குச் சொந்தமான கடைகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் போன்றவற்றைக் கொண்டே இச்சிலையின் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலிலும், 50,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பிரம்மாண்டமான அன்னதான நிகழ்ச்சி, பாரம்பரிய விறகு அடுப்புகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறை இருந்தபோதிலும், அன்னதான விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், ஏற்பாட்டாளர்கள் மண் அடுப்புகளை அமைத்து, தேவையான விறகுகளை பயன்படுத்தி அன்னதானத்தை சிறப்பாக நடத்தி முடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
