2026 சட்டமன்ற தேர்தல் இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாக இருக்கும் நாக்பூர் மற்றும் கீழடி இடையேயான சித்தாந்த மோதல் என தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.


சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கலாநிதி வீராசாமி இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரும் என பட்னவிஸ் தெரிவித்ததாக கூறி, அதற்கு திமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு முன்வைக்கும் பல கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், தேர்தல் வெற்றியை நிபந்தனையாகக் கொண்டு திட்டங்களை அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கு மெட்ரோ திட்டம் இன்னும் ஒப்புதல் பெறாத நிலையில், மக்கள் தொகை குறைவான ஆக்ரா, போபால் போன்ற நகரங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மதுரை நகருக்கான மெட்ரோ திட்டம் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே திட்ட அறிக்கை நிலையில் இருந்ததாகவும், அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பட்னவிஸ் தனது மாநிலமான மகாராஷ்டிராவுக்கே பெரிய திட்டங்களை கொண்டு வரத் தவறியவர் என்றும், அங்குச் செல்ல வேண்டிய முதலீடுகள் கூட குஜராத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு திட்டங்களை கொண்டு வருவோம் என்று கூறுவது நம்பகத்தன்மையற்றது என விமர்சித்துள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதமாகி வருவதையும் அவர்கள் எடுத்துக்காட்டினர். அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருவது, மத்திய அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது என அவர்கள் கூறினர்.
அதிமுக – பாஜக கூட்டணி இருந்த காலத்திலும் தமிழ்நாட்டிற்கு பெரிய திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், தற்போதைய வாக்குறுதிகள் வெறும் தேர்தல் அரசியல் நாடகம் மட்டுமே என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது பேச்சில், இந்த விவகாரம் வெறும் மெட்ரோ திட்டம் குறித்து மட்டும் அல்ல; இது நாக்பூரை மையமாகக் கொண்ட இந்துத்துவ அரசியலுக்கும், கீழடியை மையமாகக் கொண்ட தமிழக பண்பாட்டு அடையாளத்துக்கும் இடையிலான மோதல் எனக் குறிப்பிட்டார். கீழடி நாகரிகம் தமிழர்களின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது என்றும், ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற கொள்கை மூலம் மத்திய அரசு இதுபோன்ற வரலாற்று சிறப்புகளை புறக்கணிக்க முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கலாநிதி வீராசாமி தனது உரையில், “தமிழ்நாடு என்பது திராவிடக் கோட்டை” என வலியுறுத்தினார். மேலும், பிரதமர் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வருவது திமுகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்தும் எனவும், 2004 முதல் பாஜகவுக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்து வரும் இயக்கம் திமுக மட்டுமே என்றும் கூறினார்.
பேரிடர் நிதி, கல்வி நிதி, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய நிதி ஆதாரங்கள் தமிழ்நாட்டிற்கு போதுமான அளவில் வழங்கப்படவில்லை என்றும், மத்திய அரசு மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணித்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
எடப்பாடியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைக்கிறது – எம்.எல்.ஏ அபூபக்கர் விமர்சனம்
