கலகலப்பு 3 என்ற படத்தை தயாரிப்பதற்கு கொடுத்த முன்பணம் ஒரு கோடியே 81 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை சுந்தர் சி மோசடி செய்ததாக வி.ஆர் டெல்லா பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் மத்திய மதுரை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும், திரைப்பட இயக்குநருமான சுந்தர் சி மீது பண மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

வி.ஆர். டெல்லா பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்ட ராமன், “கலகலப்பு 3” திரைப்படத்தை தயாரிப்பதற்காக வழங்கப்பட்ட முன்பணத்தை சுந்தர் சி திருப்பி வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மொத்தம் ரூ.1 கோடி 81 லட்சத்து 15 ஆயிரம் முன்பணம் வழங்கப்பட்டதாகவும், அது மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கனவே “வல்லான்” என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தது. அந்தப் படத்தை மணி செய்யோன் இயக்க, சுந்தர் சி நடித்திருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியான அந்தப் படத்திற்குப் பிறகு, “கலகலப்பு” தொடரின் மூன்றாம் பாகத்தை தயாரிக்க ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்ததாக கூறப்படுகிறது.
இதன்போது, “கலகலப்பு 1” மற்றும் “கலகலப்பு 2” படங்களுக்குப் பின்னர், மூன்றாம் பாகத்திற்காக சுந்தர் சி ரூ.5 கோடி சம்பளம் கேட்டதாகவும், படத்தின் பட்ஜெட்டையும் அதிகரிக்கக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “அரண்மனை 4” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவுகளை உயர்த்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், அதிகப்படியான சம்பளமும், உயர்ந்த பட்ஜெட்டும் காரணமாக, 2024 அக்டோபர் மாதத்தில் “கலகலப்பு 3” படத்திலிருந்து தயாரிப்பு நிறுவனம் விலகியது. இதுவரை வழங்கப்பட்ட முன்பணமாக ரூ.1 கோடி 14 லட்சத்து 90 ஆயிரம் சுந்தர் சிக்கு, மேலும் நடிகர்கள் மிர்ச்சி சிவா மற்றும் விமலுக்கு மொத்தம் ரூ.66 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டதாகவும், மொத்தம் ரூ.1 கோடி 81 லட்சத்து 15 ஆயிரம் திருப்பி வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கோரியுள்ளது.
மேலும், இந்தத் தொகையை திருப்பிக் கேட்கும் போது, சுந்தர் சி தனது செல்வாக்கையும் ஆள் பலத்தையும் பயன்படுத்தி மிரட்டியதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கருப்பு’ அப்டேட் கொடுத்த RJ பாலாஜி – புதிய பாடல் ரெடியாகிறது!
