திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கொள்கைகளையே சிறிது மாற்றங்களுடன் வழங்குவது மாற்று அரசியல் அல்ல. உண்மையான மாற்று அரசியல் என்பது அவர்களின் சித்தாந்தங்களுக்கு மாற்றாக புதிய அணுகுமுறைகளை முன்வைப்பதே. இல்லையெனில் அது மக்களின் நேரத்தையும் நம்பிக்கையையும் வீணடிக்கும் அரசியலாகவே பார்க்கப்படும்.


திமுக, அதிமுக மேல் விமர்சனங்கள் இருந்தாலும் கடந்த 60 வருடங்களில் வளர்ச்சி இல்லை என சொல்ல முடியுமா?! முடியாது. எனவே, அவர்களுக்கு மாற்று அரசியல் என வந்தால் அவர்களால் ஏற்பட்ட வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகவும், அவர்களுடைய சரியில்லாத அணுகுமுறைகளால் கெட்டுப் போனவற்றை மாற்றி அமைக்கும் வகையிலும் புதிய அரசியல் இருக்கவேண்டும்.
இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம்.
- 1994லேயே இந்திய அளவில் சமூகநீதியில் தனிச்சிறப்பாக 69% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு உறுதி செய்தது. 30+ வருடங்கள் கடந்தும் ஆணவக் கொலைகள், சாதி இயக்கங்களின் ஆதிக்கம், கிராம பஞ்சாயத்துகளில் பட்டியல் இன தலைவர்கள் கௌரவமாக ஏற்கப்படாத நிலை என சமூக நீதியை சோதனைக்கு உட்படுத்தும் பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் சமூக, அரசியல் தீர்வுகள் என்னென்ன?
- இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கை (Higher Education Gross Enrolment Ratio) அதிகமுள்ள மாநிலம் என பெருமைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளோம். மொழிக்கொள்கையில் இருமொழிக் கொள்கை – அதிலும் இணைப்பு மொழி ஆங்கிலம் என பிடிப்பாக சொல்கிறோம். ஆனால், முதுகலை (PG) பட்டம் பெற்ற தமிழக மாணவர்களில் கூட எத்தனை % நல்ல ஆங்கிலம் பேசவோ புரிந்துகொள்ளவோ செய்கிறார்கள்? பல தேவைகளை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ளவோ அல்லது விளக்கவோ எத்தனை பேருக்கு திறன் இருக்கிறது? இந்த இடைவெளியை எப்படி நிரப்பலாம்?
அரசியலில் இத்தகைய நுணுக்கமான விஷயங்களில் புதிய சிந்தனைகளும், அணுகுமுறையும் அவசியம். அப்படி இலலாமல், திமுக அதிமுகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களையே அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என கடன் வாங்கி கலந்து அதற்கு கொஞ்சம் மசாலா தூவி “புதிய மொந்தையில் பழைய கள்” என கொடுப்பது மாற்று அரசியல் அல்ல, அது மக்களின் நேரத்தையும் நம்பிக்கையையும் வீணடிக்கும் அரசியல்.
இருக்கும் அதே அரசியலை வேறு பெயரில் தவெகவோ, மாற்று என கூறிக்கொள்ளும் வேறு எந்த கட்சியுமோ செய்யப்போகிறது என்றால், அதை திமுக அதிமுக செய்வதே மக்களுக்கு பலன் தரும்.
