Homeசெய்திகள்கட்டுரைஅணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

-

- Advertisement -

வெ.சொக்கலிங்கம்அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவைஇஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்ததற்கு பதிலாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கி வருகிறது. அதே சமயம், உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்குரிய முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசத்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால், எரிசக்தி விதியோகத்தில் சர்வதேச அளவில் ஏற்படும் இடையூறுகள் குறித்து கவலை உண்டாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் போதுமான கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் எரி பொருள் கையிருப்பு உள்ளதாக ஒன்றிய பாஜ.க அரசு கூறி வந்தாலும், எரிசக்தி தட்டுப்பாடு உள்ளது என்று ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் எண்ணெய் நிறுவனங்களே அறிக்கை வெளியிட்டுள்ளன. சுமார் 2,800 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கும் இந்தப் போரின் தாக்கம் ஏற்கனவே இந்திய சமையலறைகளைத் தொட்டுவிட்டது. சமையல் எரிவாயு பற்றாக்குறை இப்போதே தெரிகிறது; போர் மேலும் நீடித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறையும் தவிர்க்க முடியாமல் போகலாம்.

we-r-hiring

நேருவின் அணிசேரா கொள்கை

இந்தியாவின் பரந்த மக்கள் தொகை உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதால் அது ஒருபோதும் குறிப்பிட்ட எந்தவொரு அந்திய ஆதிக்கத்திற்கும் உட்படக் கூடாது என்று நேரு விரும்பினார். அதனால், இந்தியாவின் சுதந்திரத்தையும் வர்த்தகத் தன்னாட்சியையும் காக்கவும், எந்த வல்லரசின் கட்டுப்பாட்டிலும் சிக்காமல் இருக்கவும், கடந்த காலங்களில் உலகப் போர்களுக்குக் காரணமானதும் மேலும் பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான போட்டிக் குழுக்களுக்கு இடையிலான அதிகார அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற நோக்கில் 07 செப்டம்பர் 1946 அன்று அணி சேரா கொள்கையை நேரு உருவாக்கினார். நேருவின் அணிசேரா கொள்கையை உலகின் பல நாடுகள் ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதனின் இரண்டு பெரிய பலவீனங்களான பயத்தையும் வெறுப்பையும் வென்றவர் என்றும், “ஆசியாவின் ஜோதி” என்றும் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் நேருவைப் புகழ்ந்தார். நேருவின் பாதையில் நடந்த இந்தியப் பிரதமர்கள் ஒரு காலத்தில் நடுநிலைத் தலைவர்களாகக் கருதப்பட்டு வல்லரசு நாடுகளால் மதிக்கப்பட்டனர்.அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவைஅணிசேரா கொள்கைக்கு விரோதமாக மோடி

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் நில உரிமை தொடர்பாக நீண்டகாலமாக மோதலில் ஈடுபட்டுள்ளன. நேருவின்  காலம் முதல் இந்தியா மனிதாபிமான மற்றும் வரலாற்று அடிப்படையில் பாலஸ்தீனத்தை ஆதரித்து வந்தது. ஆனால் மோடி ஆட்சியில் இந்நிலைப்பாடு படிப்படியாக மாறி, இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை நோக்கி நகர்ந்தது.

இதற்கான குறிப்பிடத்தக்க நிகழ்வாக, 25-26 பிப்ரவரி 2026 அன்று மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை வரவேற்றதுடன், இஸ்ரேலுக்கும் யூத மக்களுக்கும் மோடி அளித்த ஆதரவிற்காக பதக்கம் வழங்கி கௌரவித்தார். பதிலுக்கு, “இந்தியா தாய்நாடு என்றால், இஸ்ரேல் தந்தை நாடு” என்று மோடி இஸ்ரேலை புகழ்ந்து பேசினார். இந்தப் பயணத்திற்குப் பிறகு, 28 பிப்ரவரி 2026 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது திடீர் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. எனினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து இந்தியா எந்த அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும் எடுக்காமல் மெளனம் காத்து, இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.

மார்ச் 1994இல் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட ஐ.நா. தீர்மானத்தை முறியடிக்கவும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (Organization of Islamic Cooperation) ஒருமித்த கருத்து உருவாவதைத் தடுக்கவும் ஈரான் முக்கிய பங்கு வகித்ததால், சாத்தியமான சர்வதேச தடைகளிலிருந்து இந்தியா பாதுகாக்கப்பட்டது.

இந்த வரலாற்றுப் பின்னணி இருந்த போதிலும், ஈரான் மீதான தாக்குதல்களை இந்தியா விமர்சிக்கவில்லை. மாறாக, ஈரானை கண்டிக்கும் ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா இணை ஆதரவளித்தது. மோடியின் இந்த முடிவு இந்தியாவின் பாரம்பரிய அணிசேரா கொள்கைக்கு முரணானதாகும். மேலும், இது ஈரானுடனான நீண்டகால உறவை பலவீனப் படுத்தி, இஸ்ரேல்-அமெரிக்க நலன்களுக்கு நெருக்கமாக நகரும் அபாயத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியுள்ளது.

இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தம்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவை வற்புறுத்துவதற்காக, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரியை, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 25% க்கு மேலாக மேலும் 25% உயர்த்தி, இந்தியப் பொருட்களின் மீது மொத்த வரியை 50% ஆக அமெரிக்கா உயர்த்தியது.

இதைத் தொடர்ந்து, இந்திய ஒன்றிய அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில், அமெரிக்கப் பொருட்கள் மற்றும் எரிசக்தி கொள்முதலை அதிகரிக்கவும், அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை குறைக்கவும் இந்தியா ஒப்புக் கொண்டது. இதன் பின்னர் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

சர்ச்சைக்குரிய இந்தப் புதிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியா மீதான வரியை 50%லிருந்து 18% ஆக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்தப் பின்னணியில், இந்தியா வரும் நாட்களில் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவால் பறிபோன ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி

ரஷ்யா இந்தியாவிற்கு குறைந்த விலையில் எண்ணெயை விற்று வந்தாலும், அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் ஏற்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக இநதியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. இன்று, இந்தியா யாரிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வது அமெரிக்க அதிபர் டிரம்ப்தான். இதற்கிடையில்  ஈரான் போா் காரணமாக, அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (30 நாட்களுக்கு) ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை “அனுமதித்துள்ளது”.

நமது நாட்டின் சொந்த உபயோகத்திற்காக எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளிப்பது தேசிய அவமானத்தின் உச்சமாகும். இப்போது, அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு சேர்ந்து ரஷ்யாவை விரோதித்ததன் மூலம் ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்ச எண்ணெயை வழங்க மறுத்துவிட்டதால் இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயைப் பெறும் வாய்ப்பை இழத்துள்ளது.

எரிவாயு மற்றும் எரிபொருள் விழியோகம் குறித்த அச்சம்

ஈரான் போரின் தாக்கத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு பற்றாக்குறை மட்டுமல்ல, அவற்றின் விலைகளும் வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு உயரக்கூடும் என்று பெட்ரோலிய ஆய்வாளர்கள் எச்சரிக்கின்ற நிலையில், இந்த அத்தியாவசியப் பொருட்கள் விரைவில் எந்த விலையிலும் இந்தியாவில் கிடைக்காமல் போகும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்கனவே இந்தியா முழுவதும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, இதுகுறித்து கவலைப்படாமல் மோடியின் அரசு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் குறித்த அச்சம் நிலவுவதற்கான முக்கிய காரணம், இந்தியாவின் இறையாண்மையை மோடி அமெரிக்காவிடம் அடகு வைத்ததன் நேரடி விளைவாகும்.அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவைஅமெரிக்காவில் தடம் பதிக்கும் ரிலையன்ஸ்

எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் குறித்து நாடெங்கும் கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 மார்ச் 2026 அன்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் அமைக்கப்படவுள்ள முதல் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துடன் தொடர்புடைய 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தை “அமெரிக்க எரிசக்தி” ஆதிக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக அவர் விவரித்தார்.

அமெரிக்கா – ரிலையன்ஸ் இடையிலான 300 பில்லியன் டாலர் ஒப்பந்தம் என்பது 20 ஆண்டு கால ஒப்பந்தத்தின் (Offtake Agreement) மொத்த மதிப்பு கூறப்படுகிறது. அதாவது அமெரிக்காவில் அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 20 ஆண்டுகள் எண்ணெய் வாங்க ரிலையன்ஸ் அளித்த நீண்ட கால உறுதிமொழியின் மொத் மதிப்பாக இது விளக்கப்படுகிறது.

ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த நிகர மதிப்பு சுமார் 220 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 300 பில்லியன் டாலர்கள் என கூறப்படுவது பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்கும் இந்த ஏற்பாட்டில் யார் நேரடியாக முதலீடு செய்வார்கள் என்பது தெளிவாக இல்லை. ரிலையன்ஸ் தனது சொந்த வளங்களிலிருந்து நிதியளிக்கிறதா அல்லது இந்திய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன் பெறப்படுகிறதா என்பதற்கான விளக்கமும் வெளியாகவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தில் இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளின் பங்கு என்ன என்பதும் வெளிப்படையாகத் தெரியவில்லை.

இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வலைத்தளத்தில் அறிவித்திருந்தாலும் ரிலையனஸ் நிறுவனம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதனால், இந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டின் தன்மை (Nature of Action) குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன.

மேலும், இந்தத் திட்டம் இந்திய மக்களுக்கு உண்மையில் என்ன அளிக்கும் என்பதும் தெளிவாக விளக்கப்படவில்லை. அமெரிக்காவிலிருந்து எண்ணெய் வாங்கி அதை இந்தியச் சந்தையில் விற்பனை செய்யும் திட்டம் என்றால், ரஷ்யா வழங்கும் எண்ணெய் விலையைவிடக் குறைவான விலையில் அமெரிக்கா எண்ணெய் வழங்குமா என்பதும் தெரியவில்லை.அதே போல், அமெரிக்க எண்ணெய் இந்தியாவுக்கு விற்கப்பட்டால் அதில் விதிக்கப்படும் வரிகள் என்ன என்பதும் தெளிவாக இல்லை. எனவே, இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுமா அல்லது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் அமெரிக்க அரசுக்கும் மட்டுமே பயன் அளிக்குமா என்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் இன்னும் வெளியாகவில்லை.

‘மோடி-அம்பானி-அதானி-அமெரிக்கள் கூட்டணி

ஏற்கனவே அமெரிக்காவில் முதலீடுகள் செய்துள்ள அதானி நிறுவனத்தின் செயல்பாடுகள், பின்னர் அமெரிக்காவில் தொடர்ந்த வழக்குகள் மற்றும் அதன்பின் இந்திய-அமெரிக்கத் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய நிறுவனங்களின் முதலாளித்துவ நலன்கள் மற்றும் அமெரிக்க அதிபா டிரம்பின் எரிசக்தி கொள்கை இடையே ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு, “மோடி-அம்பானி-அதானி-அமெரிக்கா” கூட்டணிகளின் நலன்களுக்கு சேவை செய்யும் வகையில் இந்தியாவின் தேசிய முன்னுரிமை ஒதுக்கப்படுவதாகத் கடுமையான கவலைகள் எழுப்புகிறது. இந்த வகையான நெருக்கமான முதலாளித்துவக் கூட்டணிகள் இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை பலவீனப்படுத்துவதைக் குறிக்கின்றன. மொத்தத்தில் இன்று, இந்திய மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்குத் தெளிவான பாதை இல்லாமல் மோடி நடுரோட்டில் நாட்டை தவிக்க விட்டுவிட்டதாகத் தெரிகிறது.

முடிவுரை

வல்லரசுகளுக்கு எதிராக சவால் விட துணிந்தால், இறுதியில் அதற்கான விலை யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஏனெனில் வரலாற்று ரீதியாக வல்லரசுகள் எப்போதும் மோசமான அரசியல் விளையாட்டுகளை விளையாட முயற்சித்துள்ளன.

இதனால்தான் நேருவின் அணிசேரா கொள்கை மிகவும் தொலைநோக்குடையதாக இருந்தது; அது அந்திய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்திய இறையாண்மையைப் பாது காக்க முயன்றது. ஆனால், இன்று மோடியின் அடிபணிந்த அணுகுமுறை (Submissive Attitude) மற்றும் அம்பானி, அதானி மீதான மோடியின் முதலாளித்துவ பாசம் காரணமாக, நேருவின் அணிசேரா கொள்கைரீதியான நிலைப்பாட்டிலிருந்து இந்தியா விலகியுள்ளது. இதன் விளைவாக இன்று இந்தியா அமெரிக்க வல்லரசின் கைப்பாவையாக மாறி, தனக்கு ஒருபோதும் தேவையில்லாத சிக்கலில் சிக்கியுள்ளது.

ஈரானின் ராஜதந்திரம் – பொருளாதார மண்டல்ததை சீர்குலைக்கும் வியூகம்….

MUST READ