சென்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்கள் மேற்பார்வையில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு J-1 சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சஞ்சய்பால் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்திருந்தார். ஆனால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணைக்கு அவர் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சஞ்சய்பாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கடந்த 24.06.2024 அன்று நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தற்போது சென்னை வில்லிவாக்கம் ஜி.கே.எம் காலனி பகுதியில் வசித்து வந்த சஞ்சய்பால் (32) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிடியாணையை நிறைவேற்றி சிறையில் அடைத்தனர்.
அம்பத்தூரில் பரபரப்பு…வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கைவரிசை…
