கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்ற கருத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சாதனி கிராமத்தில் 60 முதல் 78 வயதுக்குட்பட்ட 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களாக சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கியுள்ள சம்பவம் பலரையும் நெகிழச்சியடையச் செய்துள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தின் ஜாலவுன் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ஒரு தனித்துவமான கல்வி முயற்சி, “கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல” என்ற கருத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஜாலவுன் மாவட்டத்தின் சாதனி கிராமத்தில், 60 முதல் 78 வயதுக்குட்பட்ட 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களாக சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர்.
பள்ளி மாணவர்களைப் போல சீருடை அணிந்து, தோளில் புத்தகப்பைகள் சுமந்து வகுப்பறைக்குள் நுழைந்த இந்த முதிய “மாணவர்கள்”, சிறுவர்களுடன் சேர்ந்து பாடங்களை ஆர்வமாகக் கற்றுக்கொண்டு வருகின்றனர். தங்களது வயதைப் பொருட்படுத்தாமல், எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் பள்ளிக்குச் செல்வது பலரையும் நெகிழச்சியடையச் செய்துள்ளது.
இந்த முயற்சியின் பின்னணியில் ஜாலவுன் மாவட்டத்தின் துணைக் கோட்ட நீதிபதியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ரிங்கு சிங் ராஹி உள்ளார். கிராமப்புறங்களில் பல முதியவர்கள் எழுத்தறிவின்மையால் அன்றாட வாழ்க்கையில் சிரமங்களை சந்திப்பதை கவனித்த அவர், அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக சாதனி கிராமத்தைச் சேர்ந்த 9 பேரை அருகிலுள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களாக சேர்த்துள்ளார்.
இந்த முதியவர்கள் பள்ளிக்குள் வந்தபோது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கைதட்டலுடன் அவர்களை வரவேற்றதோடு, மலர் மாலைகள் அணிவித்து உற்சாகப்படுத்தினர். பின்னர், தங்களது பேரன், பேத்திகள் வயதுடைய குழந்தைகளுடன் அமர்ந்து பாடங்களை கவனமாகக் கேட்டனர்.
“இனி கட்டைவிரல் ரேகை வைக்காமல், நாங்களே எங்கள் பெயரை எழுதி கையெழுத்திடுவோம்” என்று அந்த முதியவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த உற்சாகமும் தன்னம்பிக்கையும் பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. முதியவர்களிடையே எழுத்தறிவை வளர்ப்பதற்கும், கல்வியின் முக்கியத்துவத்தை கிராம மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த முயற்சி உதவிகரமாக இருப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிங்கு சிங் ராஹி தெரிவித்துள்ளார். தற்போது இந்த முயற்சி நாடு முழுவதும் பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்தியாவின் மின்சார வாகன (EV) இலக்கிற்கு அதற்கு இணையான மின்விநியோக கட்டமைப்பு (Grid) உத்தி தேவை
