Homeசெய்திகள்க்ரைம்”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

-

- Advertisement -

சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க கோடம்பாக்கம் போலீசார் இரண்டு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வி (55), சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த 23ஆம் தேதி இரவு இரண்டு பேர் தங்களை “ஸ்பெஷல் டீம்” போலீசார் என கூறிக்கொண்டு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அவர்கள், “உங்கள் மகன் சரண் எங்கே?” என்று கேட்டு மிரட்டியதாகவும், தனது மகன் கடந்த நான்கு மாதங்களாக டெல்லியில் வேலை பார்த்து வருவதால் வீட்டில் இல்லை என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சரண் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவரை கைது செய்ய வந்துள்ளதாகவும் கூறிய அந்த நபர்கள், வீட்டுக்குள் நுழைந்து பீரோ உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், “உங்கள் மகனை கைது செய்யாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும்” என மிரட்டியதாகவும், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தபோது கையில் இருந்த வளையலை கழற்ற முயன்றதாகவும் செல்வி தெரிவித்துள்ளார். அது கவரிங் நகை என தெரிந்ததும், காதில் அணிந்திருந்த அரை சவரன் தங்க கம்மல் மற்றும் கையில் இருந்த அரை சவரன் தங்க மோதிரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த நகைகளை மீண்டும் பெற வேண்டுமெனில் தாங்கள் கூறும் இடத்திற்கு பணம் கொண்டு வர வேண்டும் என மிரட்டியதாகவும், அவர்கள் காவல்துறை சீருடை அணியாமல் சாதாரண உடையிலேயே வந்திருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஒரு வாட்ஸ்அப் எண்ணையும் வழங்கி சென்றுள்ளனர். அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, “மற்ற போலீசார் தொடர்பு கொள்வார்கள்” என கூறியதாகவும், பின்னர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டதாகவும், தன்னால் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே தர முடியும் என கூறியதாகவும் செல்வி தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள போலீஸ் பூத் அருகே பணத்தை ஒப்படைக்குமாறு கூறியதாகவும், அங்கு சென்றபின் மீண்டும் “இப்போது பணம் தேவையில்லை, பின்னர் சொல்லும் போது கொண்டு வாருங்கள்” என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உண்மையான போலீசார் அல்ல என்பது தெரியவந்துள்ளது. போலீசார் போல நடித்து நகைகளை பறித்துச் சென்ற நபர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாகையில் பட்டப்பகலில் கள்ளச்சாரய விற்பனை.. 5 பேர் கைது

MUST READ