சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் முயற்சியை திமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்த கருத்துகளை தெரிவிக்க மே 31-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “நாளைக்குள் நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்கிறேன்” என்ற வாசகத்துடன் கட்சியினரின் கருத்துகளை பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள UDANPIRAPINKURAL.IN இணையதளம் மூலம் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள், கட்சியின் பலம் மற்றும் பலவீனங்கள், எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. இந்த கருத்துக் கேட்பு நடவடிக்கை மூலம் அடிமட்டத் தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரின் கருத்துகளையும் நேரடியாக அறிந்து கொள்ள திமுக தலைமை முயற்சி மேற்கொண்டுள்ளது.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை இணையதளம் வாயிலாக சுமார் 4.60 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. மேலும் கருத்து தெரிவிக்க விரும்புவோர் மே 31-ம் தேதிக்குள் udanpirapinkural.in என்ற இணையதளத்தில் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் செயல்திட்டங்களை வகுப்பதற்காக இந்த கருத்துக் கேட்பு நடவடிக்கை முக்கிய பங்காற்றும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தலைமைச் செயலகத்தில் புதிய நடைமுறை – ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்
