திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘தாயுமானவர் திட்டம்’ தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படவுள்ளன.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

அரசின் பல்வேறு சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்களை அவர்களது இல்லங்களிலேயே வழங்கும் வகையில் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. திட்டத்திற்கு தகுதியான குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மின்னணு எடைத்தராசு மற்றும் e-PoS இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மூடிய வாகனங்கள் மூலம் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வழங்குகின்றனர். இந்த நிலையில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தாயுமானவர் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், நாளை மற்றும் நாளை மறுநாள் மாநிலம் முழுவதும் தகுதியுள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம் – முதல்வர் விஜய் வாழ்த்து
