டெல்லியில் நடைபெற்றுவரும் இண்டியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக, காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்கள் கடந்த காலங்களில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸை விமர்சித்து தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சரத் பவார், மம்தா பானர்ஜி ,உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் பழைய விமர்சனங்கள் இந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன.

அதில், “காங்கிரஸை நாங்கள் பலவீனப்படுத்துவதாக கூறுகிறார்கள்; ராகுல் காந்தியே அதை திறம்பட செய்கிறார்” என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தும், “தனது அடையாளத்தை இழந்து வரும் காங்கிரஸை நம்பி நாங்கள் இல்லை” என்ற மம்தா பானர்ஜியின் கருத்தும் இடம்பெற்றிருந்தன. மேலும், “20 ஆண்டுகளாக எங்கள் முதுகில் சவாரி செய்த காங்கிரஸ் இறுதியில் முதுகில் குத்தியது” என உதயநிதி ஸ்டாலின் கூறியதாக குறிப்பிடப்பட்ட வாசகமும் போஸ்டர்களில் இடம்பிடித்திருந்தது.
இந்த போஸ்டர்கள் யாரால் அச்சிட்டு ஒட்டப்பட்டன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை இந்த விவகாரம் உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சோனியா, கார்கே, ராகுல், அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா மற்றும் சுப்ரியா சுலே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்ததுடன், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார். அதே நேரத்தில், திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்தாலும், இண்டியா கூட்டணித் தலைவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தியை விமர்சிக்கும் போஸ்டர்கள் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன. வரவிருக்கும் தேர்தல் அரசியலில் இந்த நிகழ்வு எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
”Z பிரிவு பாதுகாப்பு வேண்டாம்” – உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம்…
