தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி திட்டங்களுக்கு கால அவகாசம் கேட்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கட்டுப்படுத்த உடனடி மற்றும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என்பதை ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை பெண் காவலர், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது சிறுமி மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை உள்ளிட்டோர் கடந்த இரண்டு நாட்களில் பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமைகளுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாகவும், குழந்தையின் உடல் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் மனதை உலுக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை எத்தனை காலம் சகித்துக்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அரசு தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்படும் நிலையில், மாநிலத்தில் நடைபெற்று வரும் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு
