“அரசு நிதி மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்; தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல” என்று சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், ஊழலற்ற மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை வழங்குவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துவது அரசின் முக்கிய பொறுப்பு என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதில் “சிங்கப்பெண் அதிரடிப் படை” உருவாக்கம் முக்கியமான முயற்சி என்றும் குறிப்பிட்டார்.

மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். தற்போது பேசப்படும் பல பிரச்சனைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்தவை என்றும், அவற்றை சரிசெய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தற்போது இவ்விவகாரங்களை முன்வைப்பது அரசியல் நோக்கத்துடன் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
“இது ஜனநாயக ஆட்சி; மன்னராட்சி அல்ல. மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசாக செயல்பட்டு வருகிறோம். சட்டம்-ஒழுங்கு குறித்து யாரும் கேள்வி எழுப்பலாம்,” என அவர் கூறினார்.
அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் பட்டியலிட்டார். மதுபானக் கடைகள் மூடப்பட்டதையும், சிங்கப்பெண் சிறப்பு படை உருவாக்கப்பட்டதையும், மருத்துவத் துறைக்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டதையும், குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதையும், சட்டவிரோத கனிம வளக் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையும் அவர் எடுத்துக்காட்டாக கூறினார்.
மாநிலத்தின் நிதிநிலை குறித்து பேசுகையில், “முந்தைய ஆட்சியால் கருவூலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதனை வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது நமக்கு ஆட்சி நடத்தத் தெரியாது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். மக்கள் நலப் பணிகளை செய்ய எங்களுக்கு தெரியும்; ஆனால் மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தத் தெரியாது” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, கடந்த ஆட்சியை விமர்சித்த அவர், டெண்டர் முறைகேடுகள், பணியிட நியமனங்களில் லஞ்சம், கோவில் மற்றும் கனிம வளங்களின் தவறான பயன்பாடு, அரசு நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார்.
“அரசு நிதியை அரசுக் கருவூலத்திற்கே கொண்டு சேர்க்கத் தெரியும்; தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றத் தெரியாது. போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கத் தெரியும்; அதை வளர்க்கத் தெரியாது. பெண்களை மதிக்கத் தெரியும்; அவர்களை அவமதிக்கத் தெரியாது. இத்தகைய செயல்கள் எங்களுக்கு தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை,” என்று அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். முதல்வரின் இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை
