Homeசெய்திகள்க்ரைம்தண்ணீர் பிடிப்பதில் தகராறு…வீடு புகுந்து தந்தை மகன்கள் மீது கொடூர தாக்குதல் - இளைஞர் பலி!

தண்ணீர் பிடிப்பதில் தகராறு…வீடு புகுந்து தந்தை மகன்கள் மீது கொடூர தாக்குதல் – இளைஞர் பலி!

-

- Advertisement -

சென்னை நொளம்பூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு, நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதலாக மாறி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததுடன், மொத்தம் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தண்ணீர் பிடிப்பதில் தகராறு…வீடு புகுந்து தந்தை மகன்கள் மீது கொடூர தாக்குதல் - இளைஞர் பலி!

சென்னை சின்ன நொளம்பூர் யூனியன் சாலை பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் என்பவரின் மகன்கள் சரத் (27), சஞ்சய் (24). நேற்று இரவு வீட்டின் அருகே லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த உதயா என்பவருக்கும், சஞ்சய் மற்றும் சரத் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உதயா தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உதயா, தனது சகோதரர்களான ராகேஷ், கார்த்திக் மற்றும் கஞ்சா போதையில் இருந்த நண்பர்களுடன் நள்ளிரவில் சஞ்சய் வீட்டின் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்து, சஞ்சய் மற்றும் சரத்தை அரிவாள், கத்தி, பீர் பாட்டில்களால் சரமாரியாகத் தாக்கினர். தடுக்க வந்த தந்தை முருகதாஸையும் அவர்கள் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

we-r-hiring

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு கே.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சஞ்சய், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சரத் மற்றும் முருகதாஸ் ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சஞ்சய்யின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், நொளம்பூர் போலீசார் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணையின் போது, முக்கிய குற்றவாளியான மதுரவாயலைச் சேர்ந்த ரூபேஷ் (23) என்பவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் அவரது கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும், நவீன்குமார் (24), உதயராஜ் (21), சூர்யா (20), கார்த்திக் ராஜா (26), ராகேஷ் ராஜா (26), மேஷாக் (22), சூர்யபிரகாஷ் (27) உள்ளிட்ட மேலும் 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் நொளம்பூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்கு காரணமாக அமைந்ததாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும் சஞ்சய்யின் தாய் செல்வி குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் நொளம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை – இருவர் கைது

MUST READ