தமிழகத்தில் விளையும் தேங்காய்களில் அதிகச் சுவை கொண்டதாகக் கருதப்படும் திண்டுக்கல் மாவட்டத் தேங்காய்களுக்குத் தற்போது போதிய விலை கிடைக்காததால், பறித்த தேங்காய்களைத் தோப்பிலேயே குவித்து வைக்கும் அவல நிலைக்குத் தென்னை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
65,000 ஹெக்டேர் சாகுபடி; கடும் விலை வீழ்ச்சி
தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஆத்தூர், வத்தலகுண்டு, செம்பட்டி, ஒட்டன்சத்திரம், நத்தம், பழனி, கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 65,000 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தேங்காய் சீசன் என்பதால் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு சீசன் உச்சத்தில் உள்ள நிலையில் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது சந்தையில் உரிக்காத தேங்காய் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரையும், உரித்த தேங்காய் ரூ.35 முதல் ரூ.40 வரையும், கொப்பரை தேங்காய் ரூ.120 வரையும் மட்டுமே விற்பனையாகிறது.
கட்டுப்படியாகாத செலவுகள் – விவசாயிகள் வேதனை
பொட்டாஷ் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு, தேங்காய் பறிக்கும் தொழிலாளர்களின் கூலி உயர்வு, லாரி வாடகை போன்ற செலவுகள் பலமடங்கு உயர்ந்துவிட்டன. இதனால் தற்போதைய சந்தை விலை விவசாயிகளுக்குக் கடும் நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது. எனவே, உரிக்காத தேங்காய்க்கு கிலோ ரூ.30, உரித்த தேங்காய்க்கு ரூ.60, கொப்பரைக்கு ரூ.180 என அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் கோரிக்கை
இதுகுறித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கருணாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இருந்தாலும் அவை அனைத்து விவசாயிகளுக்கும் பயன்படுவதில்லை. எனவே, கிராமக் கூட்டுறவு வங்கிகள் மூலம் தாலுகாவிற்கு ஒரு தேங்காய் கொள்முதல் நிலையத்தை அரசு அமைக்க வேண்டும். முன்பு சத்திரப்பட்டி ஊராட்சியில் கூட்டுறவு முறையில் காய்கறிகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டியது போல, தேங்காய்க்கும் கூட்டுறவு முறையைக் கொண்டு வர வேண்டும்.
காங்கேயம் மார்க்கெட்டிற்கு ஆயிரக்கணக்கான தேங்காய்கள் வந்தாலும், கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து மிகக் குறைந்த விலையையே நிர்ணயம் செய்கின்றன. இதனால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் வேறு வழியின்றி நஷ்டத்திற்கு விற்க வேண்டியுள்ளது. தென்னை மரங்களை வதைக்கும் வெள்ளை ஈ பூச்சி, கருவண்டு, ஊசி வண்டுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த அரசு மானிய விலையில் தரமான மருந்துகளை வழங்க வேண்டும்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாமாயிலுக்குப் பதிலாக, உள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவித்து, அதனை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, வறுமையின் விளிம்பில் இருக்கும் நடுத்தர மற்றும் சிறு தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேடசந்தூரில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் – இளம் பெண் விபத்தில் பலியான விவகாரத்தில் பரபரப்பு!
