Homeசெய்திகள்க்ரைம்பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட தந்தை வீட்டைச் சூறையாடி, ரூ.1.5 லட்சம்...

பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட தந்தை வீட்டைச் சூறையாடி, ரூ.1.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த கஞ்சா கும்பல்!

-

- Advertisement -

​கோவை மதுக்கரை அருகே பேச மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கியதுடன், அவரது வீட்டிற்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கஞ்சா போதை கும்பலின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக பிரமுகரின் மகன் இந்த அராஜகத்தில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட தந்தை வீட்டைச் சூறையாடி, ₹1.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த கஞ்சா கும்பல்!

​கோவை மதுக்கரை அடுத்த வழுக்குப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கீரை வியாபாரியான இவருடைய மகள், தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் அந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். ஆனால், சூர்யா பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மாணவி அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

we-r-hiring

​மாணவி மீது நடுத்தெருவில் தாக்குதல்
​நேற்று மாலை மாணவி கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது, தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்த சூர்யா, மாணவியை வழிமறித்துள்ளார். “ஏன் எனது போன் அழைப்புகளை எடுப்பதில்லை?” எனக் கேட்டுத் தகராறில் ஈடுபட்ட சூர்யா, மாணவியின் அடையாள அட்டையைப் (ID Card) பிடித்து இழுத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். ​அழுதபடி வீட்டிற்கு வந்த மாணவி, தந்தை சிவக்குமாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், சூர்யாவை நேரில் சென்று தட்டிக்கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியதை அடுத்து சூர்யா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

​புகார் அளிக்கச் சென்ற நேரத்தில் வீட்டின் மீது தாக்குதல் – ரூ.1.5 லட்சம் கொள்ளை
​பாதிக்கப்பட்ட மாணவியுடன் அவரது பெற்றோர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு நீண்ட நேரம் காத்திருக்க வைத்த போலீஸார், பின்னர் மதுக்கரை காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, அவர்கள் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துக் காத்திருந்தபோது, சூர்யாவின் கூட்டாளிகள் சிவக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபடுவதாக அக்கம் பக்கத்தினர் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். ​உடனடியாக போலீஸாருடன் சிவக்குமார் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் தொலைக்காட்சி (TV), மேஜை, சமையலறைப் பொருட்கள், மின்விசிறி, பீரோ உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியது தெரியவந்தது. மேலும், பீரோவில் கடன் அடைப்பதற்காக வைத்திருந்த ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் நகைகளும் மாயமாகியிருந்தன.

​பாதிக்கப்பட்ட தாய் கல்பனாவின் கண்ணீர் வாக்குமூலம்
“கஞ்சா போதையில் இந்த கொடூர செயலைச் செய்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த அனைத்துப் பொருட்களையும் ஒரே நாளில் அடித்து உடைத்துவிட்டனர். என் மகளின் ஐடி கார்டைப் பிடித்து அடித்தவர்கள், கத்தியால் கழுத்தை வெட்டியிருந்தால் நாங்கள் என்ன செய்திருக்க முடியும்? ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படைக்கு அழைத்தால் மதுக்கரை காவல் நிலையம் போகச் சொல்கிறார்கள். நேற்று இரவில் இருந்து காவல் நிலையத்திலேயே கிடக்கிறோம்.

பெயர், முகவரியைத் திரும்பத் திரும்ப வாங்குகிறார்களே தவிர, எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், ஒட்டுமொத்த வீட்டையும் சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யாவின் தந்தை ‘தமிழக வெற்றிக்கழக’ (தவெக) கட்சியில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்களது அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.” ​சம்பவம் நடந்து நீண்ட நேரமாகியும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்யாமல், பாதிக்கப்பட்ட தங்களையே காவல் நிலையத்தில் அமர வைத்து அலைக்கழிப்பதாக சிவக்குமார் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகு நிலையத்திற்கு உரிமம் வழங்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய பெண் உதவி ஆய்வாளர்!

MUST READ