
“இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே ஒரு காவல் அரணாக இருக்கும்” என்று திமுக முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா அவர்களின் இல்லத் திருமண விழா திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்கள் ஹனீஃப்கான் – சமீனா சப்ரியத் ஆகியோரை வாழ்த்தினர்.

இந்த விழாவில் இஸ்லாமியப் பெருமக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கழகத்தை விட்டுச் சென்றவர்கள்
”இன்றைக்கு நாட்டிலே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அத்தனை பேரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மள விட்டுட்டுப் போயிருக்காங்க. ஆனால், நீங்கள் அத்தனை பேரும் ‘நாங்கள் என்றைக்கும் கழகத்தோடு (திமுக) இருப்போம்’ என்று உறுதியோடு இங்கே வந்திருக்கிறீர்கள்.
இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கும் கழகத்திற்குமான அந்தப் பிணைப்பை, உறவை யாராலும் பிரிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.”
சிறுபான்மையினருக்கு காவல் அரண்
மேலும் பேசிய அவர், “யார் என்ன சொன்னாலும், எந்த மாதிரியான அவதூறுகளைப் பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே ஒரு காவல் அரணாக இருக்கும். நிச்சயம் உங்களோடு நம்முடைய தலைவர் அவர்களும், கழகமும் என்றும் துணையாக இருக்கும்” என உறுதியளித்தார்.
தமிழக அரசியல் சூழலில், சமீபகாலமாகப் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சித் தாவல்கள் நடந்து வரும் நிலையில், “சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
