சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பான புகார் மனு அளிக்க வந்த ராணுவ வீரர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் பலத்த சோதனை:
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த தும்பல் பகுதியைச் சேர்ந்தவர் தேவன் (விவசாயி). இவருடைய மகன் நிர்மல் (24) ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தந்தை தேவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், ஒரு மாத கால விடுப்பில் நிர்மல் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.


இந்நிலையில், இன்று தங்களது நிலப் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக ராணுவ வீரர் நிர்மல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால், ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் வழக்கம்போல உள்ளே வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
டேங்க் கவரில் இருந்த பட்டாக்கத்தி:
அப்போது ராணுவ வீரர் நிர்மல் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரது பைக்கின் முன்பகுதியில் இருந்த டேங்க் கவருக்குள் (Tank cover) ஒரு பெரிய பட்டாக்கத்தி மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாதுகாப்புப் பகுதியில் ஆயுதத்துடன் வந்ததால் உஷாரான போலீசார், உடனடியாக கத்தியைப் பறிமுதல் செய்து நிர்மலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
ராணுவ வீரரின் விளக்கம்:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராணுவ வீரர் நிர்மல் கூறியதாவது:
”தந்தை இறந்த பிறகு வீட்டில் உள்ள பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தோம். அப்போது வீட்டைச் சுத்தம் செய்யும்போது அங்கிருந்த கத்தியை எடுத்து எனது பைக்கின் டேங்க் கவரில் வைத்தேன். நிலப் பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க அவசரமாகக் கிளம்பி வந்ததால், கத்தி பைக்கில் இருந்ததை கவனிக்க மறந்துவிட்டேன்.
வேறு எந்தவொரு தவறான நோக்கத்திற்கும் இந்தக் கத்தியை நான் எடுத்து வரவில்லை.”
இருப்பினும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பட்டாக்கத்தியுடன் ராணுவ வீரர் வந்த விவகாரம் குறித்து டவுன் போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
