தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்த தவெக அரசைக் கண்டித்தும், மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரம் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரியும் திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:


ஏமாற்றத்தில் முடிந்த தேர்தல் வாக்குறுதி
கடந்த ஏப்ரல் 2026 தேர்தல் பிரசாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் எனப் பச்சைத் துண்டு அணிந்து முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்தார். தவெக தேர்தல் அறிக்கையிலும் இது இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நிலத்தின் பரப்பளவைக் கணக்கில் கொள்ளாமல், கடன் தொகையின் அளவை வைத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுத் தள்ளுபடி என அறிவித்து விவசாயிகளை ஏமாற்றினார்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன் மட்டுமே 100% தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்றும் விஜய் அரசு அரைகுறை அறிவிப்பை வெளியிட்டது.
ஏக்கத்தில் உயிர்விட்ட விவசாயி
நாகப்பட்டினம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம், கூட்டுறவு வங்கியில் நிலத்தை அடகு வைத்து 85 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அரசின் அரைகுறை அறிவிப்பால் தனது கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாததால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 4-ஆம் தேதி சென்னையில் நடந்த விவசாயிகள் போராட்டப் பிரிவில் பங்கேற்று வீடு திரும்பிய உடனே மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தவெக அரசின் வாக்குறுதி மீறலே இந்த உயிரிழப்புக்குக் காரணம்.
திமுக அரசின் சாதனைகளும், தவெக-வின் வியாக்கியானமும்
கடந்த 2006-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சராகக் கலைஞர் பதவியேற்ற அன்றே ரூ.7,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்களையும், 2021-இல் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ரூ.12,000 கோடிக்கும் அதிகமான பயிர்க்கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்து சான்றிதழ் வழங்கியது.
ஆனால், தவெக அரசோ தங்களின் தவறை மறைக்க, “ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நிபந்தனைகள் விதிக்கப்பட்டது” என வியாக்கியானம் பேசுகிறது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் 2025 நவம்பரிலேயே வெளியாகிவிட்டன. அது தெரிந்தும் பனையூரில் பஞ்சு மெத்தையில் படுத்துக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றவே விஜய் வாக்குறுதி கொடுத்தாரா? இதே காலகட்டத்தில் மகாராஷ்டிர அரசு 55.72 லட்சம் விவசாயிகளின் ரூ.36,585 கோடி பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும்போது, தமிழ்நாட்டில் தவெக அரசால் ஏன் முடியாது?
ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை
தற்போது மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடியும் பொய்த்து, விவசாயிகள் மேலும் கடனாளியாகி மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தவெக அரசு உடனடியாகத் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி நிபந்தனையற்ற முழுமையான கடன் தள்ளுபடியைச் செய்ய வேண்டும்.
உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை ஏமாற்றிய ஆட்சியாளர்கள் நீடித்து நிலைத்ததில்லை என்பதே வரலாறு.
இவ்வாறு ஏ.கே.எஸ். விஜயன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
