Homeசெய்திகள்இந்தியாவயநாடு நிலச்சரிவு சோகம்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு சோகம்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

-

- Advertisement -

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில் நேற்று காலை நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்கு நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணித் தளத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வயநாடு
இடிபாடுகளில் சிக்கித் தவித்த 9 நபர்களை உள்ளூர் மக்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக உயிருடன் மீட்டு, மேப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

6 பேரை காணவில்லை – 2-வது நாளாக தேடுதல் வேட்டை: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்புகள் முற்றிலும் மண்ணில் புதைந்துள்ள நிலையில், மேலும் 6 பேரை காணவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மீட்புக் குழுவினர் 4 மண்டலங்களாகப் பிரிந்து, மோப்ப நாய்களின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 2-வது நாளாக இன்றும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

தற்காலிக நிவாரண முகாம்கள்: மீண்டும் நிலச்சரிவு அபாயம் ஏற்படாமல் தடுக்க, அப்பகுதியில் வசித்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணியில் தொய்வு – நவீன உபகரணங்கள் பயன்பாடு: நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் சேறும் சகதியுமான சூழல் காரணமாக மீட்புப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. எனினும், கனரக இயந்திரங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கொண்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விபத்து நடந்த இடத்தைச் சுற்றி ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் தேசிய பேரிடர் மீட்புப்படையுடன் (NDRF) இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் நேரில் ஆய்வு – ரூ. 5 லட்சம் நிவாரணம்: சம்பவ இடத்தை கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் இன்று மதியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், சுரங்கப் பணி செய்த நிறுவனம் உரிய விதிகளைப் பின்பற்றியதா என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை: கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிவதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் அரசு பள்ளிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

MUST READ