சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண் காவல் உதவி ஆய்வாளரின் (SI) கணவர் ஆபாச சைகை காட்டிய விவகாரமும், அதைத் தட்டிக் கேட்கச் சென்ற பெண் காவலரை எஸ்பி தாக்க முயன்ற சம்பவமும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பெண் காவலர் ஒருவர், சென்னை மாநகர காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது வீட்டின் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வரும் கே.கே. நகர் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் (SI) ஜெயந்தி மேரி என்பவரின் கணவர், தனது வீட்டு ஜன்னலைத் திறந்து வைத்து, சமையலறையில் இருந்த பெண் காவலரைப் பார்த்து அநாகரிகமான முறையில் ஆபாச சைகை செய்துள்ளார். மேலும், கையை அசைத்துத் தன்னை நோக்கி வருமாறு சைகை காட்டி அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

தட்டிக் கேட்ட பெண் காவலருக்குக் கொலைவெறி மிரட்டல்?
எதிர் வீட்டு நபரின் இந்த அநாகரிகச் செயலால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர், உடனடியாகப் பெண் உதவி ஆய்வாளர் ஜெயந்தி மேரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஜெயந்தி மேரியிடம், “உங்கள் கணவர் என்னை நோக்கி ஆபாச சைகை செய்கிறார்” என்று புகாராகக் கூறி நியாயம் கேட்டுள்ளார். ஆனால், தனது கணவரின் தவறைக் கண்டிப்பதற்குப் பதிலாக, ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயந்தி மேரி, “எனது கணவரைப் பற்றியே குறை கூறுகிறாயா?” எனக் கூறி, சக பெண் காவலர் என்றும் பாராமல் அநாகரிகமான வார்த்தைகளால் தரக்குறைவாகத் திட்டியுள்ளார். அதோடு மட்டுமன்றி, அவரைத் தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார்
உதவி ஆய்வாளரின் கணவர் தனக்கு ஆபாச சைகை காட்டியதை அந்தப் பெண் காவலர் தனது மொபைல் ஃபோனில் வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளார். இதையடுத்து, தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட உதவி ஆய்வாளரின் கணவர் மீதும், தன் மீது தாக்குதல் நடத்த முயன்று தரக்குறைவாகப் பேசிய பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜெயந்தி மேரி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் காவலர், வீடியோ ஆதாரத்துடன் பரங்கிமலை (மவுண்ட்) காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
போலீஸ் விசாரணை
பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், மவுண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலர்கள் வசிக்கும் குடியிருப்பிலேயே, ஒரு பெண் காவலருக்கு சக அதிகாரியின் குடும்பத்தாரால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது சென்னை காவல்துறையினர் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் இன்று நேரில் வர அழைப்பு
