ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று (ஜூலை 9) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு அவர்கள் வரவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த பெருந்துறை ஜெயகுமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேரும் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனை நேரில் சந்திக்க உள்ளனர்.
முன்னதாக, இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களது ராஜினாமா குறித்த விளக்கக் கடிதத்தை சபாநாயகரிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் கூடுதல் தெளிவு மற்றும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றும் நோக்கில், சபாநாயகர் இன்று அவர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளார்.
அதேபோன்று மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் வர வாய்ப்பு?
3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி, ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும்கூட இன்று சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜினாமா கடிதங்கள் தானாக முன்வந்து, எவ்வித அழுத்தமும் இன்றி அளிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்யவே சபாநாயகர் இந்த நேடி விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
