மேட்டூர் அணைக்கு மிக அருகிலேயே வசித்தும் தங்களுக்குச் சீரான குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறி, தங்கமாபுரி பட்டினம் பகுதியில் பொதுமக்கள் இன்று காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சேலம் – மேட்டூர் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
2 மாதங்களாகத் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு
மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு தங்கமாபுரி பட்டினம் மற்றும் 8-வது வார்டு பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைகளுக்காக நகராட்சி நிர்வாகம் மூலம் நாள்தோறும் 2.50 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.


இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் விநியோகம் செய்யும் மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் இப்பகுதிகளுக்குச் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் அன்றாடத் தேவைகளுக்குக் கூடத் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
கண்டுகொள்ளாத நகராட்சி; வெடித்த போராட்டம்
சீரான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவிதமான நடடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, இன்று காலை தங்கமாபுரி பட்டினம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் திரண்டனர்.
அவர்கள் சேலம் – மேட்டூர் முக்கியச் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தின் காரணமாக, அந்த வழித்தடத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை – பொதுமக்கள் ஆவேசம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் ஆதங்கம்:
“உலகப் புகழ்பெற்ற மேட்டூர் அணை எங்கள் பகுதிக்கு மிக அருகில்தான் உள்ளது. ஆனால், ‘கண்ணெதிரே இருந்தும் குடிக்கத் தண்ணீரைக் காணோம்’ என்ற கதையாக, நாங்கள் காசு கொடுத்து லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாகப் பழுதை நீக்கி, சீரான குடிநீர் வழங்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை.” என அப்பகுதி மக்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
தற்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. இச்சம்பவத்தால் மேட்டூர் பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு நிலவியது.
