“அடுக்குமொழியில் பேசி தங்களைச் சிறந்த பேச்சாளர்கள் என்று நிரூபிப்பவர்கள் அமைச்சர்கள் அல்ல; எதார்த்தமாக மக்கள் நலன் பேசிச் செயல்படுபவர்களே சிறந்த அமைச்சர்கள். அந்த வகையில், புரட்சிகரமான மாற்றத்தை நோக்கித் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சென்று கொண்டிருக்கிறது,” என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம் சூட்டியுள்ளார். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டுச் செவிலியர் மாணவிகள் மத்தியில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஆற்றிய நெகிழ்ச்சியான மற்றும் அறிவுப்பூர்வமான உரையின் செய்தித் தொகுப்பு பின்வருமாறு:

மருத்துவர்கள் கையில் மக்கள் நல்வாழ்வுத்துறை!
விழாவில் பேசிய சபாநாயகர், “தமிழகத்திற்கு ஒரு மிகச்சிறந்த மருத்துவத்துறை அமைச்சர் (அருண் ராஜ்) கிடைத்திருக்கிறார். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் நல்வாழ்வுத்துறையின் அமைச்சரும், அதன் செயலாளரும் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இதனால் இத்துறை ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அரசாங்கம் என்பது வெளிப்படையானதாக இருக்க வேண்டும்; மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டும். அந்த வகையில், அன்றையப் பிரச்சினைகளை அன்றன்றே முடிக்கும் ஆற்றல்மிக்க முதலமைச்சராக விஜய் அவர்களை நான் பார்க்கிறேன். எதையும் மனிதநேயத்தோடு அணுக வேண்டும் என்ற உன்னத சிந்தனை அவரிடம் உள்ளது. இதனை நான் முன்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் பார்த்தேன்; இப்போது முதலமைச்சர் விஜய்யிடம் பார்க்கிறேன்,” என்று நெகிழ்ந்து கூறினார்.

எழும்பூர் மருத்துவமனையில் உருகிய முதலமைச்சர்
முதலமைச்சரின் மனிதநேயத்திற்கு உதாரணம் காட்டிய சபாநாயகர்:
”சமீபத்தில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு முதலமைச்சர் விஜய் சென்றிருந்தார். அங்கு வெறும் அரசு அதிகாரியாக ஆய்வு மட்டும் செய்துவிட்டு அவர் கடந்து செல்லவில்லை. அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளைத் தனது கைகளில் ஏந்தி, அன்போடு கொஞ்சி, ‘இந்தக் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று உருகினார். அவரிடம் இருக்கும் இந்த மனிதநேயப் பண்பையே மற்றவர்களும் தற்போது பின்பற்றி வருகிறார்கள்.”
தன் சொந்த வாழ்க்கையைப் பகிர்ந்து நெகிழ்ந்த சபாநாயகர்
தனது பழைய குடும்ப வாழ்க்கையைச் செவிலியர் மாணவிகளிடம் பகிர்ந்துகொண்ட சபாநாயகர், “நான் அதிமுகவில் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் தான் எனக்கு மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தார்கள். கட்சிப் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு நள்ளிரவில் நான் தாமதமாக வீட்டிற்கு வருவேன்.
அதுவரை என் மனைவி குழந்தைகளைச் சீராட்டி தூங்க வைத்திருப்பார். நான் வந்ததும் தூங்கும் குழந்தையை ஆசையாகத் தூக்கிக் கொஞ்சுவேன். உடனே என் மனைவி, ‘இப்போதுதான் கஷ்டப்பட்டுத் தூங்க வைத்தேன், நீங்கள் பத்து நிமிடத்தில் கொஞ்சிவிட்டுச் சென்றுவிடுவீர்கள்; மீண்டும் குழந்தை தூங்க விடியற்காலை 4 மணி ஆகிவிடும்’ என்று ஆதங்கப்படுவார். ‘குழந்தைகளை நாம் அப்படி வளர்க்காமல் விட்டுவிட்டோம், சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லையே’ என்ற வருத்தம் இப்போது எனக்குள் உள்ளது,” என்றார்.
”அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு!”
பெண்ணுரிமை குறித்துப் பேசிய அவர், “முன்பெல்லாம் ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே’ என்ற பாடலின் வரிகளைப் போல, பெண்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், இப்போது அப்படியெல்லாம் கிடையாது. அந்த காலம் வேறு, இந்தக் காலம் வேறு. இன்று பெண்கள் வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், அனைத்து விஷயங்களிலும் ஆண்களுக்குச் சரிசமமாகச் செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” எனக் குறிப்பிட்டார்.
கவிஞர் வாலியின் கவிதையை மேற்கோள் காட்டி அறிவுரை!
மாணவிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்:
வாலியின் கவிதை: கவிஞர் வாலி எழுதிய “கட்டிலில் சத்தம் தொட்டிலில் முத்தம்” என்ற புகழ்பெற்ற கவிதையை மேடையில் மேற்கோள் காட்டிய சபாநாயகர், “ஒவ்வொரு சத்தத்திற்கும் ஒரு குழந்தை என்ற பழைய நிலை மாறி, இனி ஆரோக்கியமான குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்குவதே நம் இலக்காக இருக்க வேண்டும்,” என்றார்.
இளைய சமுதாயத்திற்கு எச்சரிக்கை: “இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தைச் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும், போதைப்பொருள் போன்ற தவறான பழக்கங்களும் சீரழித்து வருகின்றன. உங்களிடம் மிகப்பெரிய சக்தி உள்ளது. எனவே, சரியான முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள், நல்ல புத்தகங்களை வாசியுங்கள், விளையாட்டிலும் சமூக சேவைகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகம் எந்த நோக்கில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நன்றி உணர்வோடு உற்று நோக்குங்கள்.”
சுற்றுச்சூழல் மற்றும் எதிர்காலம்: “மக்கள் தொகை அதிகரிப்பது இயற்கை வளங்களின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலைவாய்ப்பு, ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இளைஞர்களின் கனவுகளுக்கு இந்த அரசு என்றும் துணையாக நிற்கும். இளைஞர்களின் கனவுகள் நினைவாகும் போதுதான் இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக மாறும். தமிழ்நாடு பிரகாசிக்க வேண்டும் என்ற சிந்தனை எல்லோருக்கும் இருக்க வேண்டும்,” என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது உரையை நிறைவு செய்தார்.
