கரூரில் முதலமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்து ‘தில் இருக்கா, திராணி இருக்கா’ எனப் பேசிய பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.


இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆக்ரோஷப் பேச்சுக்குக் காரணம் அன்றைய திமுக அரசின் ‘அதிநாகரிக அரசியல்’ மற்றும் சட்டரீதியான மெத்தனப் போக்குதான் எனக் குற்றம் சாட்டி, சமூக வலைத்தளத்தில் திமுக ஆதரவாளர் ஒருவர் எழுதியுள்ள காரசாரமான விமர்சனக் கட்டுரை தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அதன் விரிவான செய்தித் தொகுப்பு பின்வருமாறு:
“சிறப்பான ஆட்சி… ஆனால் ஒரு அரசனாகத் தோற்ற இடம் இதுதான்!”
”கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், ‘எல்லாக் குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள், எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன்’ என்று சொல்லி, காலை உணவுத் திட்டம் மற்றும் ‘நான் முதல்வன்’ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் மூலம் அதனைச் செயல்படுத்தியும் காட்டினார் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும், ஒரு நேர்மையான அரசன் ஒரு இடத்தில் சறுக்கிவிடுவான் என்பதற்கு உதாரணமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் தோற்றுப்போன இடம்—கடந்த ஆண்டு கரூரில் நடந்த அந்த மாபெரும் துயரச் சம்பவம்தான்.”
“41 உயிர்பலிக்குக் காரணமானவர் மீது ஏன் FIR இல்லை?”
”கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு திரு. விஜய் அவர்கள் மிகத் தாமதமாக வந்தார். காலையிலிருந்தே உணவும், தண்ணீரும் இன்றித் தவித்துக் கொண்டிருந்த மக்கள் மத்தியில், விஜய் வந்தவுடன் அவர் இருந்த வேனின் விளக்குகள் ‘ஆன், ஆஃப்’ செய்யப்பட்டன. இதனால் உற்சாகமடைந்த மக்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 குழந்தைகள் உட்பட 41 அப்பாவி மக்கள் பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தனர்.
அன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் களத்தில் நின்று போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துப் பல உயிர்களைக் காப்பாற்றினர். இருப்பினும், 41 பேர் உயிரிழப்பதற்குக் காரணமான அந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கிய, தாமதமாக வந்து கூட்டத்தை உசுப்பேப்பிய திரு. விஜய் அவர்களின் பெயரை, காவல்துறை அன்றைக்கு முதல் தகவல் அறிக்கையிலோ (FIR) அல்லது முதற்கட்டக் குற்றப்பத்திரிகையிலோ சேர்க்கவே இல்லை.
அதற்கு என்ன அரசியல் காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும், எத்தகைய அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும்; ஆனால், ஒரு அரசனாக 11 குழந்தைகள் உட்பட 41 பேரின் மரணத்திற்கு மிக முக்கியக் காரணியாக இருந்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தவறிய இடத்தில்தான் மு.க.ஸ்டாலின் எனும் முதலமைச்சர் தோற்றுப்போனார்.”
“அதிநாகரிக அரசியலின் விலை!”
”அன்று உங்கள் நாகரிக அரசியலால் நீங்கள் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் விட்ட காரணத்தினால் தான், இன்று அதே மேடையில் ஏறி நின்று திரு. விஜய் அவர்கள், ‘என்னைப்போல ஓப்பனாகப் பேச முடியுமா? தில் இருக்கா? திராணி இருக்கா?’ என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி பயன்படுத்தும் ‘திராணி’ என்ற வார்த்தையையே பயன்படுத்தி அநாகரிகமாகப் பேசுகிறார்.
ஸ்டாலின் சார்… நீங்கள் அன்று காட்டிய நாகரிக அரசியலுக்கான விலையை இன்று நீங்கள் மட்டும் அனுபவிக்கவில்லை; தமிழக மக்களும், குறிப்பாக உங்களுக்கு வாக்களித்த 65 சதவீத மக்களும் அனுபவித்து வருகிறார்கள். கரூரில் பலியான அந்த 11 குழந்தைகளுக்கு நீங்கள் அன்று உண்மையாக, ஒரு கடுமையான ஆட்சியாளராக இருந்திருக்க வேண்டும்.
தமிழக மக்கள் எப்போதும் ஜெயலலிதா காலத்து அதிரடி அரசியலைத் தான் விரும்பியிருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கும் அதிரடி ஆட்சியாளராக நீங்கள் அன்று மாறத் தவறியதன் பலனைத்தான், இன்று தமிழ்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது” என்று அந்த அரசியல் விமர்சனப் பதிவில் மிக ஆவலாதியோடு குறிப்பிடப்பட்டுள்ளது.
