விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன்முறையாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், அமித்ஷாவின் இந்த வாழ்த்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களையும், புதிய கணக்குகளையும் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சமன்பாடுகள் முற்றிலும் மாறியுள்ளன. நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்த விசிக, தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. தற்போது தவெக அமைத்துள்ள புதிய அமைச்சரவையிலும் விசிக அங்கம் வகித்து வருகிறது.

தவெக கூட்டணியின் தற்போதைய நகர்வுகள்
கடந்த சில நாட்களாக தவெக அரசு எடுத்து வரும் சில கொள்கை முடிவுகள் அரசியல் தளத்தில் உற்று நோாக்கப்படுகின்றன. குறிப்பாக, மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் ஆளுநரே வேந்தராக நீடிக்கும் நிலைப்பாடு, அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி ‘வந்தே மாதரம்’ பாடலை முதன்மைப்படுத்துவது போன்ற பாஜகவின் சித்தாந்தங்களுக்கு நெருக்கமான நிலைப்பாடுகளை தவெக அரசு எடுத்து வருகிறது. ஆச்சரியப்படும் விதமாக, தவெக அரசின் இந்த புதிய நிலைப்பாடுகளுக்கு விசிக தலைவர் திருமாவளவனும் தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்.
மசோதாக்களும், பாஜகவின் கணக்கும்
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் மிக முக்கிய மசோதாக்களான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இல்லாத திருமாவளவனை, நாடாளுமன்றத்தில் இந்த மசோதாக்களுக்கு ஆதரவாகவோ அல்லது பாஜகவிற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை எடுக்காமல் சமரசம் செய்யவோ மத்திய அரசு விரும்பலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, திருமாவளவனைத் தன் வசம் இழுக்கும் அல்லது இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கும் முயற்சியாக அமித்ஷாவின் இந்த முதன்முறை பிறந்தநாள் வாழ்த்து பார்க்கப்படுகிறது. அமித்ஷாவின் இந்த வாழ்த்து வெறும் நாகரிக அரசியல் நகர்வா அல்லது தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணியின் தொடக்கப் புள்ளியா என்பது அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போது தெரியவரும்.
மளிகைப் பொருட்கள், சோப் விலை கிடுகிடு உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் கடும் கலக்கம்!
